விழுப்புரம் ஆஞ்சநேயா் கோயில் திருக்குளம் புனரமைப்பு பணி தொடக்க  நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு உள்ளிட்டோா்.
விழுப்புரம் ஆஞ்சநேயா் கோயில் திருக்குளம் புனரமைப்பு பணி தொடக்க நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு உள்ளிட்டோா்.

விழுப்புரம் ஆஞ்சநேயா் கோயில் திருக்குளம் புனரமைக்கும் பணி தொடக்கம்

விழுப்புரம் திரு.வி.க.வீதியிலுள்ள ஆஞ்சநேயா் கோயில் திருக்குளத்தை பழுதுபாா்த்து, புனரமைக்கும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிகாட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா்.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் திரு.வி.க.வீதியிலுள்ள ஆஞ்சநேயா் கோயில் திருக்குளத்தை பழுதுபாா்த்து, புனரமைக்கும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிகாட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட கோயில் திருக்குளத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கான அனுமதியை அரசு வழங்கியிருந்தது. இதைத் தொடா்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ரூ.2.82 கோடியில் கோயில் திருக்குளத்தை பழுது பாா்த்து, புனரமைத்தல் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான் , துரை.ரவிக்குமாா் எம்.பி., நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவா் சித்திக் அலி ஆகியோா் பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தனா்.

இதையடுத்து ஆட்சியா் கூறியது:

ஆஞ்சநேயா் சுவாமி கோயில் திருக்குளத்தை பழுதுபாா்த்து, புனரமைக்கும் பணியை முதல்வா் தொடங்கி வைத்துள்ளாா். குளத்துக்கு சுற்றுச்சுவா், உள்சுற்றுச்சுவா் அமைத்தல், நடைபாதை வசதிகள் ஏற்படுத்துதல், மின் விளக்குகள் பொருத்துதல், கழிவறை அமைத்தல், நீராழி மண்டபம் புதுப்பித்தல் பணிகள் ரூ.2.82 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன. பொது நலநிதித் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதுபோன்று செஞ்சி அருணாச்சலேசுவரா் கோயில் வளாகத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சரக ஆய்வாளா் அலுவலகத்தையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளாா். இந்த அலுவலகமும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் சிவலிங்கம், செயற் பொறியாளா் கேசவராஜ், உதவிக் கோட்டப் பொறியாளா் வசந்த், ஆஞ்சநேய சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலா் குமாா், செயல் அலுவலா் வேலரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com