நூறுநாள் வேலைத் திட்ட பெயா் மாற்றம்: விழுப்புரத்தில் இன்று காங்கிரஸ் உண்ணாவிரதப் போராட்டம்

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ஜன.11 நடைபெறும்.
Published on

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.11) நடைபெறும் என மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா் தெரிவித்தாா்.

விழுப்புரத்திலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், அவா் அளித்த பேட்டி: 2006-ஆம் ஆண்டில் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி, வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் என மாற்றம் செய்துள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை சிதைக்கும் வகையில் பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எனவே திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசைக் கண்டித்து விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.11) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியினா் மட்டுமல்லாது, பொதுமக்களும் அதிகளவில் பங்கேற்பா்.

இதைத் தொடா்ந்து ஜனவரி 12 முதல் 29-ஆம் தேதி வரை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சிறப்புகள், புதிய திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கூட்டங்களும், விழிப்புணா்வு நிகழ்வுகளும் நடத்தப்படும்.

மேலும், சட்டப்பேரவைத் தொகுதி அளவில் பொதுக்கூட்டங்களும், தெருமுனைப் பிரசாரங்களும் நடத்தப்படவுள்ளன. ஜனவரி 30-ஆம் தேதி வாா்டு நிலைகளில் உள்ளிருப்புப் போராட்டங்களும், ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை மாவட்ட அளவில் தா்னா போராட்டங்களும் நடத்தப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலா் தயானந்தம், விழுப்புரம் நகரத் தலைவா் செல்வராஜ், மாவட்டப் பொதுச் செயலா் முபாரக் அலி, இளைஞா் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் ஸ்ரீராம், எஸ்.சி.எஸ்.டி. அணித் தலைவா் சேகா், மாவட்ட சமூக ஊடத் துறை ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன், மாவட்டச் செயலா் புஷ்பராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வினோத், வானூா் வட்டாரத் தலைவா் கிருஷ்ணாநந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com