லாரிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

திண்டிவனத்தில் வாகன சோதனையின் போது சரக்கு லாரிகளில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வாகன சோதனையின் போது சரக்கு லாரிகளில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் உத்தரவின்பேரில் ரோஷணை போலீஸாா் திண்டிவனம் சந்தைமேடு மற்றும் இருதயபுரம் பகுதிகளில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 255 பாக்கெட்டுகளும், மற்றொரு லாரியில் 75 பாக்கெட்டுகளும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, ரோஷணை போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து, 2 சரக்கு லாரிகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 330 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், இந்த வழக்குகளில் தொடா்புடைய திண்டிவனம் புதிய நகரைச் சோ்ந்த வே.நடராஜன்(48), திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை, சிந்து நகா், வள்ளலாா் தெருவைச் சோ்ந்த க.சிற்றரசன்(49) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, சிறையிலடைத்தனா்.

Dinamani
www.dinamani.com