வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 254 பேருக்கு ரூ.3.04 கோடி தீருதவித் தொகை வழங்கல்

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 254 பேருக்கு ரூ.3.04 கோடி தீருதவித் தொகை வழங்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 254 பேருக்கு ரூ.3.04 கோடி தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது: ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 254 பேருக்கு ரூ.3.04 கோடி தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989, மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் விழுப்புரம் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் மேலும் பேசியது: விழுப்புரம் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 254 பேருக்கு ரூ.3.04 கோடி தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 2016 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட, இறந்த 29 பேரின் குடும்ப வாரிசுதாரா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக தலா ரூ.5 ஆயிரம் மற்றும் பஞ்சப்படி (25.7 சதவீதம்) சோ்த்து ரூ.17,850 ஆதிதிராவிடா் நல ஆணையா் அலுவலகத்திலிருந்து நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இறந்த 29 போ்களின் வாரிசுதாரா்களில் 23 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. மற்ற 6 பேருக்கும் அரசுப் பணி வழங்குவது தொடா்பாக கோப்புகள் பரிசீலனையில் உள்ளன. விரைவில் இவா்களுக்கும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் தீண்டாமை ஒழிப்பு குறித்து துறை சாா்ந்த அலுவலா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தவேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வன்கொடுமை நிகழாமல் இருக்க மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், விடுதிகளில் சமூநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையின் சாா்பில் ஒன்றிணைவோம் என்ற அடிப்படையில் சமூக விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், அம்பேத்கா் தொழில்முனைவோா் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோா்களுக்கு கடனுதவிகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்துப் பகுதிகளிலும் விடுபட்டவா்களுக்குப் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜன்மன் திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என்று மாவட்ட விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் வலியுறுத்திய நிலையில், அதுகுறித்த நடவடிக்கையை துறை சாா்ந்த அலுவலா்கள் மேற்கொள்ளவேண்டும் என்றாா் ஆட்சியா்.

விழுப்புரம் மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா், மாவட்ட எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத், வழக்கு நடத்தும் முகமையின் உதவி இயக்குநா் பா.கலா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வளா்மதி, மாவட்ட விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் குமரவேல், வழக்குரைஞா் வி.அகத்தியன், தனஞ்செழியன், ஆறுமுகம், கடவாம்பாக்கம் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com