தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் நாகசேரி சப்தமாதர் கோயிலில் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

சிதம்பரம் நாகசேரி குளம் வடகரையில் அமைந்துள்ள சப்தமாதர் கோயிலில் அண்ணாமலைப் பல்கலை. வரலாற்று ஆய்வாளர்களால் கிபி 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டறியப்படுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2014, 12:29 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நாகசேரி குளம் வடகரையில் அமைந்துள்ள சப்தமாதர் கோயிலில் அண்ணாமலைப் பல்கலை. வரலாற்று ஆய்வாளர்களால் கிபி 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டறியப்படுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் குறித்து தெரிவித்தது: கைலாயத்திலிருந்து வந்த பதஞ்சலி முனிவர் (ஆதிசேடனின் அவதாரம்) தில்லைவனத்தில் உருவாக்கிய தீர்த்தம் என்றும், அவர் வழிபட்ட இறைவனே அனந்தீஸ்வரர் என தில்லை தலபுராணம் கூறுகிறது.

சப்தமாதர்கள்: சப்தமாதர் அல்லது சப்த கன்னியர் என்று குறிப்பிடப்படுவோர் பிராமி, மகேஸ்வரி, கெளமாரி, வைணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி போன்றவராவர். சப்த மாதர்களுக்கு தொடக்க காலத்தில் படிமங்கள் எதுவும் உருவாக்கப்படாமல் ஏழு கற்களை பிரதிஷ்டை செய்து கடவுள்களாக எண்ணி வணங்கினர்.  முற்காலச் சோழர்கள் தாங்கள் எடுப்பித்த சிவாலயங்களில் அஷ்ட பரிவார தெய்வங்கள் என்று பெயரிட்டு சூரியன், சந்திரன், சப்தமாதர்கள், கணபதி, முருகன், மூத்ததேவி, சண்டிகேஸ்வரர், பைரவர் என அனைவருக்கும் திருஉருவம் செய்து தேவக்கோட்டத்தில் (கருவறை சுவற்றில்) அமைத்தனர். நாகசேரி குள வடகரையில் உள்ள சப்தமாதர்கள் பதஞ்சலி முனிவருக்காக வானுலக்கில் இருந்து வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. சோழர்கள் தங்கள் கட்டிய கோயில்களில் அனைத்திலும் சப்த மாதர்களுக்கும் திருமேனி எடுத்து சிறப்பித்தனர்.

Story image

சூரர மகளிர்: சூர், சூரர மகளிர், வரையா மகளிர் எனப் பலவாறும் இத்தெய்வ மகளிர் அழைக்கப்பட்டனர். மலைதான், இவர்களின் உறைவிடமாக கருதப்பட்டாலும் அகநானூற்றில் "ஆ ஆய் நன் நாட்டு அணங்குடைச் சிலம்பில் கவிரம் பெயரிய உருகெழு கவா அன், நேர்மலர் நிறைசுனை உரையுஞ், சூர்மகள் மாதோ என்னுமென னெஞ்சே" என பரணர் பாடியதின் வாயிலாக சூரர மகளிர் உறையுமிடமாக சுனையும் போற்றப்பட்டது என்ற உண்மை புலனாகும். ஆகவே நாகசேரி தீர்த்தமும் சிறப்பு வாய்ந்ததாகும்.

Story image

பிற்காலச் சோழர் கல்வெட்டு: வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் திருக்கோயிலின் மேற்புற கோஷ்ட சுவரில் யாண்டு பதினான்கு எனத் தொடங்கும் நான்கு வரியிலான தமிழ்வரி கல்வெட்டு காணப்படுகிறது. சூரரற்கு சந்தி விளக்கெரிக்க கைக்கொண்ட காசு இருபத்தைந்து எனும் செய்தியை கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்வெட்டு குறிக்கும் சூரர்கள் வேறு யாருமல்ல, சப்தமாதர்களே சூரர்கள் எனும் பெயரில் அழைக்கப்பட்டனர். கல்வெட்டில் குறிக்கப்படும் சந்தி விளக்கெரிக்க கைக்கொண்ட காசு இருபத்தைந்து என்பது சந்திபூஜை நடக்கும் நேரத்தில் விளக்கெரிக்க வழங்கப்பட்ட தானமாகும். திருக்கோயில்களில் வழிபாடு நடக்கும் காலத்தை ஆறு சந்நிதிகளாக (தற்போது நாம் பேச்சுவழக்கில் இதனை ஆறுகால பூஜை என கூறுகிறோம்) கூறுவர். இக்கல்வெட்டினை வெளியிட்ட மன்னன் யார் என்பது பற்றி தகவல் இல்லை. எனினும் இக்கல்வெட்டின் எழுத்து அமைந்துள்ளதை கொண்டு இக்கல்வெட்டு கிபி 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என உறுதிபடுத்தலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Story image

தற்போது பூஜையின்றி உள்ளது: கோயிலின் தற்போதைய கட்டட அமைப்பு மிகவும் பிற்காலத்தது ஆகும். சோழர் ஆட்சியில் ஆறுகால பூஜையுடன் வழிபாடு நடைபெற்ற இக்கோயில் ஒருகால பூஜைக்கே வழியின்றி பரிதாப நிலையில் உள்ளது. பதஞ்சலி முனிவருக்காகவும், மக்களை அருள்விக்கவும் வந்த சப்தகன்னியர்கள் வீற்றிருக்கும் சப்தமாதர்கள் கோயிலின் பழம்பெருமை மீட்டெடுத்து, கோயிலை திருப்பணி செய்து பூஜைகள் நடைபெற வேண்டும் என்பதே சமூகஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.