/

சிதம்பரம் வெடிகுண்டு சம்பவம்: முக்கிய குற்றவாளி சுரேந்திரன் நள்ளிரவில் நீதிபதி முன் ஆஜர்

சிதம்பரம் மாரியப்பாநகரில் வீடு ஒன்றில் கடந்த மே.3-ம் தேதி வெடிகுண்டு வெடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் ஒரு முக்கிய குற்றவாளியான 9 எம்எம் துப்பாக்கியுடன் தலைமறைவான சுரேந்திரனை அண்ணாம

News image
Updated On :14 மே 2014, 8:53 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் மாரியப்பாநகரில் வீடு ஒன்றில் கடந்த மே.3-ம் தேதி வெடிகுண்டு வெடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் ஒரு முக்கிய குற்றவாளியான 9 எம்எம் துப்பாக்கியுடன் தலைமறைவான சுரேந்திரனை அண்ணாமலைநகர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் சுரேந்திரனை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணி்க்கு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையிடைத்தனர்.

சிதம்பரம் மாரியப்பாநகர் 2-வது தெற்கு குறுக்குத்தெருவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளது. இந்த வீட்டில் தரைதளத்தில் உள்ள இடதுபுறத்தில் உள்ள பகுதியை அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரியும் அருள்பிரசாத் (34) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (மே.3) காலை 10.40 மணிக்கு அருள் வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல் நாகல்நகர் 4-வது தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் (34) படுகாயமுற்றார்.

அப்போது அவரை மற்ற இருவரும் ஆட்டோவில் கொண்டு சென்று சிதம்பரம் மாரியம்மன்கோயில்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். மேலும் அந்த வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, யுஎஸ்ஏ முத்திரை பதித்த 6 எம்எம் துப்பாக்கி, சீனா செல்போன், அரிவாள்கள் மற்றும் டைரி, சிம்கார்டுகள், பான்கார்டுகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன. படுகாயம் அடைந்து சிதம்பரம் ராஜா முத்துயா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன்ராம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்காக மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம்,  அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீனா, பி.முருகானந்தம் மற்றும் தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருள்பிரசாத் தனது மனைவி ஊரில் இருக்கும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களை தவிர மற்ற நாட்களில் அவரது நண்பர்களான சிதம்பரம் கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேந்திரன் (33), திருவாரூர் மாவட்டதைச் சேர்ந்த சேர்ந்த சந்தோஷ் (25), சிதம்பரம் அண்ணாமலைநகர் திருவக்குளத்தில் கறிக்கடை வைத்துள்ள பட்டாபிராமன் (25), திண்டுக்கல் நாகல்நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் (39) ஆகிய 4 பேரும் வீட்டிற்கு வந்து மதுஅருந்துவார்கள். சனிக்கிழமை காலை வெடிகுண்டு வெடித்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என அருள்பிரசாத் தெரிவித்துள்ளார்.

பின்னர் போலீஸார் பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத்திடம் விசாரணை நடத்தியதில் சரியான தகவல் கிடைக்கவில்லை என்பதால், பல்கலை ஊழியர் அருள்பிரசாத் தான் வாடகைக்கு எடுத்த வீட்டை பல்வேறு நபர்களை தங்க வைத்து வெடிகுண்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து மே.6-ம் தேதி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். பின்னர் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த அண்ணாமலைநகர் திருவக்குளத்தைச் சேர்ந்த பட்டாபிராமன் (25). திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (25) ஆகிய இருவரை தனிப்படை போலீஸார் மே.7-ம்தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட தனிப்படை போலீஸார் சிதம்பரம் அண்ணாமலைநகர் வி.எம்.கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான சுரேந்திரன் (33) என்பவரை திங்கள்கிழமை பிடித்து விசாரணனை செய்து வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு அண்ணாமலைநகர் போலீஸார் சுரேந்திரனை சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையிடைத்தனர்.

விசாரணை குறித்த தகவல் தெரிவிக்க மறுத்த போலீஸார்: சிதம்பரம் வீட்டில் வெடிகுண்டு வெடித்த வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரெளடி மோகன்ராம் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவ்வழக்கில் வீடு வாடைகைக்கு எடுத்து தங்கியிருந்து பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத், அவரது கூட்டாளிகள் பட்டாபிராமன், சந்தோஷ்குமார், சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். ஆனால் விசாரணை விபரம் குறித்தும், வாக்குமூலம் குறித்தும் போலீஸார் செய்தியாளர்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்க மறுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.