அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

விஷ்ணுபிரியா வீட்டுக்கு வந்த மர்மக் கடிதத்தால் பரபரப்பு

விஷ்ணுபிரியா வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்த மர்மக் கடிதத்தால் குடும்பத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Published On :

விஷ்ணுபிரியா வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்த மர்மக் கடிதத்தால் குடும்பத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ர.விஷ்ணுபிரியா (27) கடந்த 18-ம் தேதியன்று அங்குள்ள முகாம் அலுவலக குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக கண்காணிப்பாளர் நாகஜோதி தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வியாழக்கிழமையன்று நாகஜோதி தனது குழுவினருடன் கடலூர் மாவட்டம், கோண்டூரில் உள்ள விஷ்ணுபிரியா வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அவரது தாயார் கலைச்செல்வி, தங்கை திவ்யா ஆகியோரிடம் விஷ்ணுபிரியாவின் குணநலன்கள் குறித்த கேள்விகளை கேட்டுள்ளனர். எனினும், விசாரணை முழுமையாக முடிவடையாமல் திரும்பிச் சென்றனர். அவரது தந்தை ரவியிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா பெயரில் சேலத்தில் முத்திரையிடப்பட்ட பெயர், விலாசம் இல்லாத கடிதம் வந்தது. அதனை உறவினர்கள் பெற்று படித்தபோது அதிர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது.

அக்கடிதத்தில் ""கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரோடு செயல்படும் சில ஜாதிவெறி பிடித்த காவலர்களும், காவல்துறையைச் சேர்ந்தவர்களும் விஷ்ணுபிரியாவை பலாத்காரத்துக்கு உட்படுத்தி கொலை செய்திருக்கலாம். எனவே மறு உடற்கூறு பரிசோதனை வேண்டுமென அரசை வலியுறுத்துங்கள்'' என்று கூறப்பட்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் ரவி மேலும் சில சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

விஷ்ணுபிரியா இறப்புக்கு 20 நாள்களுக்கு முன்பிலிருந்தே சிலர் வீட்டினை நோட்டம் விட்டு வந்துள்ளனர். அவர்களிடம் நீங்கள் யார் என்று கேட்டதற்கு சரியான பதில் அளிக்காமல் சென்று விட்டனர். விஷ்ணுபிரியா இறந்த 18ஆம் தேதி பகல் 2.38 மணியிலிருந்து 5 மணி வரை அவரது செல்லிடப்பேசியில் நடந்த உரையாடலை கைப்பற்றி விசாரித்தாலே இறப்புக்கான காரணம் தெரிந்துவிடும்.

விஷ்ணுபிரியா, தான் விசாரித்து வந்த கொலை வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்தியுள்ளார். அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், திருச்செங்கோடு பகுதியில் 1 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையை முழுமையாக தடுத்ததாலும் இவர் மீது பலர் ஆத்திரத்தில் இருந்ததாகத் தெரிகிறது. எனவே இதில் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

சிபிசிஐடி போலீஸார் எனது மகள் எழுதியதாகக் கூறப்படும் 9 பக்க கடிதத்தை காண்பித்தும், சில புகைப்படங்களை காண்பித்தும் விளக்கம் கேட்டனர். அதில், 2 பக்கம் மட்டுமே விஷ்ணுபிரியாவின் கையெழுத்து. மற்றவை அவரது கையெழுத்து இல்லை என்று கூறிவிட்டோம் என்றும் ரவி கூறினார்.

காதல் பிரச்னை காரணமா? இந் நிலையில், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி போலீஸ் எஸ்.பி நாகஜோதி, ஏடி.எஸ்.பி ஸ்டாலின், டி.எஸ்.பி.கள் ராஜன், வேலன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கடந்த 19ஆம் தேதி முதல் நாமக்கல், சேலம், கடலூர் மாவட்டங்களில் முகாமிட்டு, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷ்ணுபிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகள் தொல்லையே காரணம் என அவரது தோழியும், டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி குற்றம்சாட்டியதால், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை அந்தக் குற்றச்சாட்டை மையப்படுத்தியே நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது.

விஷ்ணுபிரியா 2 செல்லிடப்பேசிகளை வைத்திருந்தார். ஒன்று அலுவலகப் பணிக்கும், மற்றொன்று சொந்த விஷயங்களுக்கும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில், அவர் சொந்த தேவைக்கு வைத்திருந்த செல்லிடப்பேசி எண் அழைப்பு விவரங்களை சிபிசிஐடி போலீஸார் சேகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசியல் கட்சிகள், ஊடகங்கள், விஷ்ணுபிரியாவின் தோழி மகேஸ்வரி உள்ளிட்டோரால் குற்றம்சாட்டப்படும் காவல் துறை உயரதிகாரிகள் அளித்த தகவலின்பேரில், சிபிசிஐடி போலீஸார் இந்த விவரங்களை சேகரித்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதில், விஷ்ணுபிரியாவுக்கும், சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் இருந்ததும், அதில் பிரச்னை ஏற்பட்டு இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட போலீஸார் தங்கள் மீதான நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இந்த விவரங்களை சிபிசிஐடி போலீஸாருக்குத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

விஷ்ணுபிரியா தற்கொலை நிகழ்ந்து 8 நாள்கள் முடிந்துள்ள நிலையில், இதுவரை அறியப்படாத, விவாதிக்கப்படாத கோணத்துக்கு இந்த வழக்குத் திரும்பியுள்ளது, போலீஸார் மட்டுமன்றி, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் கவனம் செலுத்திய அனைத்துத் தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்:  விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.