வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தாம்பரம் - செங்கோட்டை ரயில் மீண்டும் இயக்கப்படுமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

பல்வேறு மாவட்ட மக்கள் பயன்பெற்று வந்த தாம்பரம் - செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

News image
Updated On :8 டிசம்பர் 2017, 7:24 pm

ச.முத்துக்குமாா்

பல்வேறு மாவட்ட மக்கள் பயன்பெற்று வந்த தாம்பரம் - செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
தெற்கு ரயில்வே சார்பில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு சோதனை அடிப்படையில் பயணிகள் ரயில் (வண்டி எண்: 06071-06072) கடந்த நவம்பர் மாதம் இயக்கப்பட்டது. இந்த ரயில் வாரத்துக்கு 5 முறை இயங்கும் வகையில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு விழுப்புரம், கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் வழியாக செங்கோட்டைக்குச் சென்று வந்தது. பகல் நேரத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில், கடலூர் மாவட்டத்திலிருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பயணிகளுக்கு மிகுந்த பயனளித்து வந்தது. எனினும், இந்த ரயில் மாவட்டத் தலைநகரான கடலூரில் நின்றுச் செல்லவில்லை.
எனவே, இந்த ரயில் கடலூர் திருப்பாதிரிபுலியூர், கடலூர் துறைமுகம் சந்திப்பில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, கடலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அவரது கோரிக்கையை ஏற்று, இந்த ரயில் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லுமென தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி நவம்பர் 23-ஆம் தேதி முதல் இந்த ரயில் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றது.
இந்த ரயிலால் கடலூரிலிருந்து திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களும், மாலையில் அலுவலகப் பணி முடிந்து விழுப்புரம், சென்னை செல்ல வேண்டியவர்களும் பயன்பெற்று வந்தனர். இதனால், இந்த ரயிலுக்கு பயணிகளிடம் வரவேற்பு அதிகமாக இருந்தது. ஆனால், இந்த ரயில் சேவையை தெற்கு ரயில்வே கடந்த 1-ஆம் தேதியுடன் நிறுத்திவிட்டது. இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் கூறியதாவது: இந்த ரயிலால் கடலூர் மாவட்ட மக்கள் மிகவும் பயன்பெற்று வந்தனர். மக்களவை உறுப்பினரின் முயற்சியால் இந்த ரயில் கடலூரில் நின்று சென்ற நிலையில், சோதனை ஓட்டத்துக்காக இயக்கப்பட்டதால் நிறுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், இதுகுறித்து எவ்வித முன்னறிவிப்பும் வெளியிடாததால், பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்த ரயிலானது சோதனை ஓட்டத்தின்போதே ரயில்வே துறைக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயிலை அதிகமானோர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால் நிரந்தரமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ரயில் நிறுத்தம் குறித்து தங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை என திருப்பாதிரிபுலியூர் ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆ.அருண்மொழிதேவன் எம்.பி. கூறியதாவது: தாம்பரம் - செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிரந்தரமாக்கப்பட்டு நின்றுச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது போல இந்த ரயிலும் நிரந்தரமாக்கப்படும்.
மேலும், கடலூர் திருப்பாதிரிபுலியூர், துறைமுகம் சந்திப்பு வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் நின்றுச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.