வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுமா?

கடலூர் மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2017, 10:19 pm

ச.முத்துக்குமாா்

கடலூர் மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-ன் கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை (எல்கேஜி) வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரும் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை இத்திட்டத்தை 121 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், 253 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த சேர்க்கை ஒதுக்கீட்டிலிருந்து 25 சதவீதத்தை இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அதன்படி, மெட்ரிக் பள்ளிகள் அளவில் மொத்தமுள்ள 7,170 இடங்களில் 1,844 இடங்களும், பிரைமரி, நர்சரி பள்ளிகளில் மொத்தமுள்ள 13,140 இடங்களில் 3,285 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மொத்தம் மாவட்டத்தில் சேர்க்கை செய்யப்பட வேண்டிய 20,310 இடங்களில் இத்திட்டத்தின் கீழ் 5,129 இடங்கள் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கப்படும்.
இந்தச் சேர்க்கைக்கு இணைய வழியாக கடந்த ஏப்.20 முதல் மே 26-ஆம் தேதி வரை மாவட்டத்தில் மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் வரப்பெற்றிருந்தன. இதில் பெரும்பாலும் ஒரே விண்ணப்பதாரர் பல்வேறு பள்ளிகளுக்கு விண்ணப்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தனியார் சுயநிதிப் பள்ளிக்கும் விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பட்டியல், முதன்மைக் கல்வி அலுவலரால் மே 31-ஆம் தேதி வழங்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் பள்ளிகளில் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. இதில் சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் அன்றே பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்படும். ஜூன் 5-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதில் மாவட்டக் கல்வி நிர்வாகம் சரிவரச் செயல்படவில்லை என பெற்றோர் தரப்பில் புகார் கூறப்படுகிறது. தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் பள்ளிகளில் ஒட்டப்படவில்லையெனவும், இணையம் மூலமாகவே தகவல் வரும் என்றும் கல்வித் துறையினர் கூறி வருகின்றனராம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளைத் தொடர்புக் கொண்டாலும் அவர்களும் அலைக்கழிக்க வைக்கும் வகையிலான பதிலையே தருகிறார்களாம்.
ஜூன் 5-ஆம் தேதிக்குள் பள்ளியில் சேராவிட்டால், அந்த இடங்களில் மற்றவர்களை நிரப்பிக் கொள்ளும் வசதியும், ஏற்கெனவே கூடுதலாக தேர்வு செய்யப்பட்ட 5 பேரை சேர்க்கவும் பள்ளி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களின் பெற்றோர்களுக்கு சனிக்கிழமை இரவு வரை தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரியாததால் அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்துகொள்வதற்காக முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் உள்பட அனைத்து உயர் அலுவலர்களைத் தொடர்பு கொண்டும் அவர்கள் தெளிவான பதிலை வழங்கவில்லை.
எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, மாணவர்களின் கல்வி உரிமையைப் பெற்றுத்தர வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.