மணல் குவாரிக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
காட்டுமன்னார்கோவில் அருகே குவாரியில் விதிகளை மீறி அதிகளவில் மணல் அள்ளப்படுவதாகவும்,


காட்டுமன்னார்கோவில் அருகே குவாரியில் விதிகளை மீறி அதிகளவில் மணல் அள்ளப்படுவதாகவும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் கூறி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே தில்லைநாயகபுரம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியிலிருந்து தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட லாரிகள், டிராக்டர்கள் மூலமாக மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. குவாரியில் விதிகளை மீறி அதிக ஆழத்தில் மணல் அள்ளப்படுவதால் ஆற்றின் கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், புளியங்குடி, ஆழங்காத்தான், வீரசோழபுரம் உள்ளிட்ட 25 கிராமங்களைச் சேர்ந்த 50 பெண்கள் உள்பட 250 பேர் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் குவாரியில் குவிந்தனர். குவாரியிலிருந்து மணல் ஏற்றக்கூடாது என வலியுறுத்தி குவாரி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மணல் அள்ளும் பணி பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் ஜெயந்தி, சேத்தியாதோப்பு டிஎஸ்பி குத்தாலிங்கம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சேத்தியாதோப்பு காவல் ஆய்வாளர்கள் ஷியாம்சுந்தர், குமார், வீரமணி மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் விரைந்து வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், அளவுக்கு அதிகமான ஆழத்திலிருந்து மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் தண்ணீர் உவர்ப்பு தன்மையாக மாறி வருகிறது என புகார் தெரிவித்தனர்.
மேலும், அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்தல், கொள்ளிடக்கரை மற்றும் தெருக்களில் சாலைகள் சேதமடைதல், அதிக வாகனங்கள் செல்வதால் மாசு பிரச்னை ஏற்படுதல் போன்ற பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை 15 தினங்களில் எடுக்கப்படும்.
குவாரியில் அதிக ஆழத்தில் மணல் எடுப்பது தடுக்கப்படும். அரசு நிர்ணயித்த ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ளப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.
இதனை ஏற்று பெரும்பாலானோர் கலைந்து சென்ற நிலையில், சுமார் 15 பேர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனுமதியின்றி மறியல் செய்ய முற்பட்டதாகக் கூறி அவர்கள் 15 பேரையும் குமராட்சி போலீஸார் கைதுசெய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்பு அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...