நடைப்பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது: காங்கிரஸ் வலியுறுத்தல்

அரசு விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாதென காங்கிரஸ் வலியுறுத்தியது.
Updated on
1 min read

அரசு விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாதென காங்கிரஸ் வலியுறுத்தியது.
 தமிழகம் முழுவதும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்துவதற்கு அரசு கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது.
 அதன்படி, கடலூரிலுள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ள ரூ. 250 மாதக் கட்டணமாகச் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
 இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் சொத்து மீட்புக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எஸ்.சந்திரசேகர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: சமுதாய மேம்பாட்டுக்காகவும், மனித ஆரோக்கியத்துக்காகவும் மாணவர்களிடையே விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்க வேண்டிய அரசு, விளையாட்டில் ஈடுபடுபவர்களிடம் கட்டணம் வசூலிப்பது மிகப் பெரிய சமூகச் சீர்கேடாகும்.
 இதுபோன்ற கட்டண வசூலிப்பால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் ஆரோக்கியம் முடக்கப்படுவதுடன், விளையாட்டில் உலக நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலை உருவாக்கி விடும். எனவே, எதிர்கால நலன் மற்றும் இளைஞர்கள், மாணவர்கள், முதியோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கட்டணம் வசூலிக்கும் முறையைக் கைவிட வேண்டும். இல்லையெனில், கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 விளையாட்டு அலுவலர் விளக்கம்
 நவம்பர் 1-ஆம் தேதி முதல் கட்டண வசூலிப்பு இருக்குமென கூறப்பட்ட நிலையில், புதன்கிழமை கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதுதொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை (நவ. 2) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கூட்டம் நடைபெறுவதாகவும் அதில் எடுக்கப்படும் முடிவு செயல்படுத்தப்படுமெனவும் மாவட்ட விளையாட்டு அலுவலர் மா.ராஜா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com