நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

உள்ளூர் கட்டுமானப் பணிகளுக்கு மணல் ஒதுக்கீடு கிடைக்குமா? கட்டட தொழிலாளர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு மணல் ஒதுக்கீடு கிடைக்கப்பெறுமா என தொழிலாளர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு மணல் ஒதுக்கீடு கிடைக்கப்பெறுமா என தொழிலாளர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் மணல் அள்ளுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்ட நிலையில் தற்போது 8 இடங்களில் அரசு மணல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. மணல் குவாரிகளிலிருந்து அரசால் மணல் அள்ளப்பட்டு அவை கிடங்குகளுக்குக் கொண்டு வரப்பட்டு மறு விற்பனை செய்யப்படுகிறது.
 இதற்காக, லாரிகள் பிரத்யேகமான செல்லிடப்பேசி ஆப்-களில் முன்பதிவு செய்து அதற்கான பணத்தை கட்ட வேண்டும். அவ்வாறு பணம் கட்டிய வாகனத்தின் பதிவு எண் கொண்ட லாரிக்கு மட்டுமே மணல் வழங்கப்படுகிறது. அந்த மணலும் எங்குச் செல்கிறது என்பதை குறிப்பிட வேண்டும். இவ்வாறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்திச் செல்லப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
 8 மணல் கிடங்குகளில் கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 2 மணல் கிடங்குகள் செயல்படுகின்றன. கடலூர் அருகே தென்பெண்ணையாற்றில் மருதாட்டிலும், குள்ளஞ்சாவடி அருகே முட்டத்திலும் இந்த கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகியநத்தம், திருக்கண்டேஸ்வரம், வான்பாக்கம் ஆகிய குவாரிகளில் அள்ளப்படும் மணல் மருதாட்டிலும், கொள்ளிடம் ஆற்றில் குஞ்சமேட்டில் அள்ளப்படும் மணல் முட்டத்திலும் விற்பனையாகிறது.
 ஒரு யூனிட் மணல் லாரிகளுக்கு ரூ.1,330 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 2 யூனிட்டுகளும், அதிகபட்சம் 3 யூனிட்டுகளும் லாரிகளில் ஏற்றப்படுகிறது. ஆனால், கடலூர் மாவட்டத்துக்கான மணல் தேவையை இந்தக் குவாரிகள் பூர்த்தி செய்யவில்லையென கட்டுமான பொறியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 கடலூர் மாவட்டத்தில் தற்போது 3 யூனிட் கொண்ட மணல் ரூ. 22 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்படும் மணலுக்கு ரூ.2,500 வரை வசூலிக்கப்படுகிறது.
 ஆனாலும், மணல் தட்டுப்பாடு நிலவுவதால் ஏராளமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. கட்டடத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
 கடலூர் மாவட்டத்தில் அள்ளப்படும் மணல் வேறு மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் அங்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், உள்ளூர் கட்டுமானத்துக்கான மணல் கிடைப்பதில்லை. எனவே, இந்த குவாரிகளில் உள்ளூர் கட்டுமானத்துக்காக முன்னுரிமை அளித்தோ அல்லது குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடு செய்தோ மணல் வழங்க வேண்டுமென கட்டட பொறியாளர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலர் என்.முத்துக்குமரன் கூறினார்.
 இதுகுறித்து பொதுப்பணித் துறை (கனிம வளம்) அலுவலர்கள் தரப்பில் தெரிவித்ததாவது:
 மருதாடு, முட்டத்தில் கடந்த மே மாதம் முதல் மணல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதுவரை மருதாட்டிலிருந்து 7 ஆயிரம் லோடும் (2 யூனிட் கொண்ட லாரி), முட்டத்திலிருந்து சுமார் 9 ஆயிரம் லோடும் மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அரசுக்கு ரூ.4.18 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மருதாட்டிலிருந்து மணல் எடுக்க இதுவரை 7,959 பேர் பணம் கட்டி பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு 19 நாள்கள் தள்ளி தேதி வழங்கப்பட்டுள்ளது. முட்டத்தில் 5,118 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். ஒரு நாளைக்கு தலா 250 முதல் 300 லாரிகள் வரை மணல் கிடங்கிலிருந்து மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 தனியார் கட்டுமானப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டம் தற்போது எதுவும் இல்லை. எனினும், அரசுக்கு பரிந்துரை செய்யலாம். ஆனால், அரசு கட்டுமானப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 2 குவாரிகளிலிருந்து நேரடியாக மணல் அள்ளப்படுகிறது.
 விரைவில் புதியதாக கிளியனூர், ஆயிப்பேட்டை, மிராளூர், மணவாளநல்லூர், அக்கடவல்லி, எணதிரிமங்கலம், வானமாதேவி, விலங்கல்பட்டு, சன்னியாசிப்பேட்டை, எலந்தம்பட்டு, காமாட்சிப்பேட்டை ஆகிய இடங்களில் குவாரிகள் அமைக்கப்பட உள்ளன.
 இதில், மாட்டு வண்டிகளுக்கு தனி குவாரியும் அமைய உள்ளது என்று தெரிவித்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.