வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

குழந்தைகள் மையத்தில் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளி!: 12 ஆண்டுகளாக நீடிக்கும் அவலம்

சிறுநெசலூர் கிராமத்தில் உள்ள குழந்தைகள் மையத்தில் 12 ஆண்டுகளாக  அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

News image
Updated On :7 ஜூன் 2019, 6:50 pm

ச.முத்துக்குமாா்

சிறுநெசலூர் கிராமத்தில் உள்ள குழந்தைகள் மையத்தில் 12 ஆண்டுகளாக  அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
நல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது சிறுநெசலூர் கிராமம். விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட இந்தக் கிராமத்தில் சுமார் 2,500 பேர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்காக அரசு, ஆதிதிராவிடர் நலத் துறை மூலமாக 1963-ஆம் ஆண்டிலிருந்து தொடக்கப் பள்ளியை நடத்தி வருகிறது. ஆனால், இந்த பள்ளி கடந்த 12 ஆண்டுகளாக குழந்தைகள் மையத்தில் இயங்கி வருகிறது. 
இந்தக் கிராமத்தில் இயங்கி வந்த தொடக்கப் பள்ளியானது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக கடந்த 2007-ஆம் ஆண்டு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. 
இதற்கு மாற்றாக அமைக்கப்பட்ட பள்ளிக்கு நெடுஞ்சாலையை சுற்றிக் கொண்டு 2 கி.மீ. தொலைவு வரை செல்ல வேண்டியிருந்ததால் அந்தப் பகுதியினர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்ததோடு, புதிதாக ஊருக்குள் பள்ளி கட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். 
பலகட்டப் போராட்டங்களுக்கு பின்னர், புதிய பள்ளிக் கூடம் கட்டித்தர மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்ததாகவும், அதுவரை தற்காலிகமாக சிறுநெசலூர் கிராமத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழுள்ள குழந்தைகள் மையத்தில் பள்ளி இயங்கும் என்று விருத்தாசலம் கோட்டாட்சியரால் 2007-ஆம் ஆண்டு பேசி முடிவெடுக்கப்பட்டது.  
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியினர் தங்களது குழந்தைகளை குழந்தைகள் மையத்தில் இயங்கும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.  தற்போது அந்தப் பள்ளியில் சுமார் 60 மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் இதுவரை, தொடக்கப் பள்ளிக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. இதுதொடர்பாக, கிராம மக்கள் வட்டாட்சியர் முதல் ஆட்சியர் வரை மனு அளித்தும்,  சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  குழந்தைகள் மையத்தின் ஒரு பகுதியில் பள்ளியும், மற்றொரு பகுதியில் அங்கன்வாடி மையமும் செயல்படுகின்றன. 
இதுகுறித்து கிராம நிர்வாகிகள் கூறியதாவது: இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முறையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. போதுமான  வகுப்பறை வசதியின்றி 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை  படிக்கும் அனைத்து மாணவர்களையும் ஒரே அறையில் வைத்து கல்வி புகட்ட வேண்டியுள்ளது. பணிபுரியும் 3 ஆசிரியர்களுக்கும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அருகிலுள்ள வீடுகளில் இருந்து தான் மாணவ, மாணவிகள்,ஆசிரியர்களுக்கு குடிநீர் வாங்கி வந்து வழங்க வேண்டியிருக்கிறது. 
அங்கன்வாடி மையத்துக்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்த நிலையில் தற்போது இடப் பற்றாக்குறையால் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சமைக்க சமையல் கூடம் இல்லை. இதனால், பள்ளி சுவர் ஓரத்தில் உணவு சமைக்கப்படுகிறது. இடப் பற்றாக்குறை பிரச்னை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து வசதிகளுடன் கூடிய  புதிய பள்ளிக் கட்டடம் கட்டித் தர வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.