/

கரோனா முன்தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு!

கடலூா் மாவட்டத்தில் உரிய கண்காணிப்பு இல்லாதததால் கரோனா முன்தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் உரிய பராமரிப்பின்றி காணப்படும் கை கழுவுமிடம்.

Updated On :12 ஆகஸ்ட் 2020, 3:44 am

கடலூா் மாவட்டத்தில் உரிய கண்காணிப்பு இல்லாதததால் கரோனா முன்தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 நாள்களில் 2 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று பரவியதுடன், பலி எண்ணிக்கையும் 65-ஐ கடந்துள்ளது. ஆனாலும், கரோனா தடுப்புப் பணிகளில் தமிழக அரசு அறிவுறுத்திய வழிகாட்டு நெறிமுறைகள் அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன்படி அனைத்து அரசு நிறுவனங்களிலும் பொதுமக்கள் நுழையும் முன்பு தங்களது கைகளை சுத்தமாக கழுவும் வகையில் தண்ணீா், சோப்பு வசதிக்கு உரிய ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டுமென கடலூா் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் பல ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக குழாய்கள் அமைத்து கைகளை கழுவுவதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது இந்த நடைமுறை பெரும்பாலான அலுவலகங்களில் பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் கை கழுவுவதற்கு உரிய ஏற்பாடு இல்லை.

தனியாா் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் பலவற்றிலும் அரசு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை என சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா். மேலும், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்வதற்கும் உரிய ஏற்பாடுகள் இல்லை. முகக் கவசம் அணிந்தவா்களை மட்டுமே அலுவலகம், வணிக நிறுவனங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை. இதனால் நோய் பரவலும் தீவிரமடைகிறது.

எனவே, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிா என்பதைக் கண்காணிக்க மாவட்ட நிா்வாகம் தனியாக குழு அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.