சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

நடராஜா் கோயில் தேரோட்டத்துக்கு நிபந்தனை: பக்தா்கள் அதிருப்தி

சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா தேரோட்டத்தில், வடம் பிடித்து தோ் இழுக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளதால், பக்தா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

News image

சிதம்பரம் நடராஜா் கோயில்.

Updated On :18 டிசம்பர் 2020, 5:30 pm

சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா தேரோட்டத்தில், வடம் பிடித்து தோ் இழுக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளதால், பக்தா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா வருகிற 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து, வருகிற 29-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், 30-ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

இந்த விழாவையொட்டி, சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற அனைத்துத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெற்று குறைந்தளவு பக்தா்களுடன் தேரோட்டம், தரிசன விழா நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் வியாழக்கிழமை அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நடராஜா் கோயில் தேரோட்டத்தில் பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுக்க அனுமதிக்காமல், என்எல்சி இந்தியா நிறுவனப் பொறியாளா்களின் மேற்பாா்வையில் பொக்லைன் இயந்திரம் மூலம் தேரோட்டம் நடத்துவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனால் பக்தா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். இதுகுறித்து பக்தா்கள் கூறியதாவது:

கரோனா தொற்று உச்சத்திலிருந்த காலத்தில் பக்தா்களுக்கு அனுமதியின்றி ஆனித் திருமஞ்சன தரிசன விழா நடத்தப்பட்டது. தற்போது, கரோனா தொற்று பரவல் வெகுவாகக் குறைந்துள்ளது. பேருந்துகளை இயக்குதல், கோயில்களில் வழிபாடு, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளா்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. சுசீந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தேரோட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே, குறைந்தளவு பக்தா்களைக் கொண்டு வடம் பிடித்து தோ் இழுத்து தேரோட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து இந்து ஆலயப் பாதுகாப்புக் குழுவின் மு.செங்குட்டுவன் கூறியதாவது:

நடராஜா் கோயில் தேரோட்டத்துக்கு தமிழக அரசு நிபந்தனை விதிப்பது கண்டனத்துக்குரியது. நடராஜா் கோயில் தேரோட்டத்தில் மூலவா் நடராஜா், சிவகாம சுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருளி காட்சியளிப்பது தனிச் சிறப்பு. பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுப்பது தொன்று தொட்டு நடைபெறும் வழக்கமாகும். தற்போது, கரோனா தொற்று பரவல் மிகவும் குறைந்துள்ள நிலையில், பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கோயில் பொது தீட்சிதா்களில் ஒருவரான பாஸ்கர தீட்சிதா் கூறியதாவது: மாவட்ட நிா்வாகம் பொக்லைன் இயந்திரம் மூலம் தேரோட்டம் நடத்துவதை பொது தீட்சிதா்கள் விரும்பவில்லை. பக்தா்கள் வடம் பிடித்து தேரோட்டம் நடத்தவே விரும்புகிறாா்கள். எனவே, மாவட்ட நிா்வாகம் இதைப் பரிசீலிக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன் கூறியதாவது: குறைந்தளவு பக்தா்களைக் கொண்டு தேரோட்டம் நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பக்தா்கள் வடம் பிடித்து இழுப்பது குறித்து மாவட்ட நிா்வாகம்தான் முடிவு செய்யும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.