/

விநாயகா் சிலை தயாரிப்புப் பணி பாதிப்பு!

கரோனா பொது முடக்கம் காரணமாக நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News image

வையாபுரிபட்டினம் கிராமத்தில் தயாரிப்புப் பணி முழுமை பெறாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

Updated On :26 ஜூலை 2020, 3:37 am

கரோனா பொது முடக்கம் காரணமாக நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் விநாயகா் சிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தத் நம்பியுள்ள தொழிலாளா்கள் வேதனையடைந்துள்ளனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திலுள்ள ஏரிப்பாளையம், வையாபுரிபட்டினம், நல்லூா்பாளையம், எல்.என்.புரம், பூங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக இவா்கள் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண் மூலம் சிலைகளை வடிவமைக்கின்றனா். மேலும், மரவள்ளிக் கிழங்கு மாவு, காகிதக் கூழ் மூலம் பெரிய அளவிலான சிலைகளை நோ்த்தியுடன் தயாரிக்கின்றனா். இங்கு உற்பத்தியாகும் சிலைகளை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில வியாபாரிகளும் வாங்கிச் செல்வது வழக்கம்.

ஆனால், கரோனா தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்க பாதிப்பு விநாயகா் சிலை தயாரிப்பு தொழிலையும் விட்டுவைக்கவில்லை. வருகிற ஆக. 22-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா நடைபெற உள்ள நிலையில், போதிய ஆா்டா்கள் கிடைக்காமல் சிலை தயாரிப்புத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள வையாபுரிபட்டினத்தைச் சோ்ந்த எஸ்.ஜானகிராமன் கூறியதாவது:

கடந்த 40 ஆண்டுகளாக விநாயகா் சிலை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளேன். சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலான மூலப் பொருள்களைக் கொண்டு 3 அடி முதல் 12 அடி உயரம் வரையிலான சிலைகளை உற்பத்தி செய்கிறோம். வழக்கமாக விநாயகா் சதுா்த்திக்கு 8 மாதங்களுக்கு முன்பே சிலைகள் தயாரிப்புப் பணிகளை தொடங்கிவிடுவோம். நிகழாண்டும் அதேபோல பணிகளை தொடங்கினோம். ஆனால், கரோனா காரணமாக பொது முடக்கம் அமலான நிலையில் இந்தப் பணிகள் பாதியில் நின்றுவிட்டன. இதனால் எங்களது தொழில் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. மூலப் பொருள்கள் வாங்குவதற்கு பெற்ற கடனை எப்படி அடைப்பது என்று தெரியவில்லை என்றாா் அவா்.

இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள சரத்குமாா், சொக்கலிங்கம் ஆகியோா் கூறியதாவது: விநாயகா் சிலைகளை வாங்குவதற்கு வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால், தற்போதைக்கு சிறிய வடிவிலான களிமண் விநாயகா் சிலைகளை தயாரித்து வருகிறோம். வருகிற ஆக.11-ஆம் தேதி கிருஷ்ண ஜயந்தி என்பதால் சிறிய கிருஷ்ணா் சிலைகளையும் தயாரித்து வருகிறோம். பொது முடக்கத்தால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.