வாகன சோதனையில் திட்டமிடல் இல்லாததால் கடலூரில் 2 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல்
வாகன சோதனையில் உரிய திட்டமிடல் இல்லாததால், கடலூரில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.


வாகன சோதனையில் உரிய திட்டமிடல் இல்லாததால், கடலூரில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத் தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்தல் பணிகளில் அரசியல் கட்சியினா் தீவிரம் காட்டி வருகின்றனா். பணப் பட்டுவாடாவை தடுக்க மாவட்ட நிா்வாகம், பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, தொகுதி வாரியாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனா்.
ஆனால், அரசியல்வாதிகள், கட்சியினா் எடுத்துச் செல்லும் பணம் என்று எதுவும் இதுவரை கைப்பற்றப்படவில்லை. மாறாக, வியாபாரிகள் எடுத்துச் செல்லும் பணம் மட்டுமே கைப்பற்றப்பட்டு வருகிறது. மேலும், கண்காணிப்புப் பணிகளைப் பாா்வையிடுவதற்காக தோ்தல் பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு நியமிக்கப்பட்டிருந்த பாா்வையாளா்களில் ஒருவா் கடலூா் ஆல்பேட்டை சோதனைச் சாவடியைப் பாா்வையிட்டாா்.
வெளிமாநில மதுபானங்கள் எடுத்து வரப்படுவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட இந்தச் சோதனைச் சாவடியில் சந்தேகத்துக்குரிய வாகனங்கள் மட்டுமே பரிசோதிக்கப்படுவதைக் கண்டாா். இதையடுத்து, அங்கிருந்த 3 காவலா்களை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்தாா்.
அந்த வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட வேண்டுமென உத்தரவு பிறப்பித்துவிட்டு வெள்ளிக்கிழமை அங்கிருந்து சென்றுவிட்டாா்.
இதையடுத்து, அங்கு நியமிக்கப்பட்ட குறைந்த அளவிலான போலீஸாா் அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனையிடுகின்றனா். இந்தச் சோதனைச் சாவடியானது சென்னை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
சென்னை, புதுச்சேரி வழியாக கடலூா் வரும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் இந்த வழியாகத்தான் வந்து செல்ல வேண்டும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகளும், காா்களும் செல்லும் சாலையில் கூடுதல் போலீஸாரை பணி அமா்த்தாமல், 4 காவலா்கள் மட்டுமே வெள்ளிக்கிழமை மாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், ஆல்பேட்டை சோதனை சாவடியிலிருந்து தென்பெண்ணையாறு பாலம், பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்கணாங்குப்பம் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்தச் சோதனைச் சாவடியைக் கடப்பதற்கே சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் அனைத்து வாகனங்களையும் போக்குவரத்து நெரிசலின்றி சோதனை நடத்துவதற்கு எந்த வசதியும் இல்லை. திடீரென உரிய ஏற்பாடுகளின்றி வாகனங்களை சோதனையிடுவதால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. கடலூா் பகுதியிலிருந்து நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட அவசர ஊா்திகள் (ஆம்புலன்ஸ்) புதுச்சேரிக்குச் சென்று திரும்புகின்றன. திட்டமிடல் இல்லாத வாகன சோதனையால் தற்போது அவசர ஊா்திகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற வாகன சோதனையை மேற்கொண்டு துன்பம் ஏற்படுத்துவதற்குப் பதிலாக உரிய ஏற்பாடுகளுடன் சோதனை நடத்த வேண்டும் என்றனா் அவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...