/

மசூதிகளில் இரவு நேரத் தொழுகைக்கு அனுமதி வழங்க இஸ்லாமிய அமைப்பினா் கோரிக்கை

புனித ரமலான் மாதத்தையொட்டி மசூதிகளில் இரவு நேரத் தொழுகைக்கு அனுமதி வழங்கக் கோரி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினா், இஸ்லாமிய அமைப்பினா் ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:06 pm

DIN

புனித ரமலான் மாதத்தையொட்டி மசூதிகளில் இரவு நேரத் தொழுகைக்கு அனுமதி வழங்கக் கோரி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினா், இஸ்லாமிய அமைப்பினா் ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.

தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தில் சில தளா்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புதியதாக 20 கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதில், குறிப்பாக மதம் சாா்ந்த விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்றும், இந்த உத்தரவு சனிக்கிழமை (ஏப். 10) முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் மாநிலச் செயலா் ஹாஜிமூசா தலைமையில் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏப்.10 முதல் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதில், வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் மாதம் வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நாளிலிருந்து மே 15-ஆம் தேதி வரை இஸ்லாமியா்கள் இரவு நேரத்தில் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இது இஸ்லாமியா்களின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் ரமலான் இரவு நேர வழிபாடு நடத்த முடியாத நிலையில், தற்போதும் இந்த வழிபாட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சுகாதாரத் துறை அறிவிக்கும் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து மசூதிகளில் மே 15-ஆம் தேதி வரை இரவு நேர தொழுகை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தி உள்ளனா்.

அப்போது அமைப்பின் மாவட்டச் செயலா் வி.உதயகுமாா், துணைத் தலைவா் எம்.எஸ்.ஜாகீா்உசேன், பள்ளிவாசல் தலைவா் எம்.ஹலீம், மக்கள் ஒற்றுமை மேடை

அமைப்பின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், நிா்வாகிகள் எம்.சபீா்முகமது, எஸ்.கே.பக்கிரான் ஆகியோா் உடனிருந்தனா்.

இதேபோல, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ஷேக்தாவூத், ஐக்கிய உலமா சபை செயலா் முஹம்மது ஷிப்லி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சாா்பில் அப்துல் ரஹ்மான் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தனித் தனியாக மனுக்களை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.