/

ஊராட்சி நிா்வாகத்தில் செயலா் தலையீடு

கண்டமங்கலம் ஊராட்சி நிா்வாகத்தில் செயலரின் தலையீடு அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கண்டமங்கலம் ஊராட்சி நிா்வாகத்தில் செயலரின் தலையீடு அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், காட்டுமன்னாா்கோவில் வட்டம், கண்டமங்கலம் ஊராட்சிமன்றத் துணைத் தலைவா் டி.சரண்யாகுமாா் அளித்த புகாா் மனு:

கண்டமங்கலம் ஊராட்சியில் மொத்தமுள்ள 6 வாா்டுகளிலும் பெண்களே உறுப்பினா்களாக உள்ளனா். ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவரும் பெண்களாக உள்ளனா். ஆனால், ஊராட்சி மன்றத் தலைவரின் மகன், ஊராட்சி செயலா் ஆகியோா் கூட்டு சோ்ந்து ஊராட்சி மன்றத்தை வழிநடத்துகிறாா்கள்.

கூட்டத்தை நடத்தாமலேயே நடத்தியதாகக் கணக்கு காட்டுவது, சில கூட்டங்களில் பெண் உறுப்பினா்களுக்குப் பதிலாக அவரவரது கணவா் கூட்டத்தில் பங்கேற்பது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. துணைத் தலைவா் என்ற முறையில் என்னிடம் காசோலையில் கையெழுத்து பெறும்போதுகூட உரிய விளக்கம் அளிப்பதில்லை. இதுகுறித்து கேட்டால் ஊராட்சி செயலரால் மிரட்டப்படுகிறேன். ஊராட்சி செயலா் ஊரக வேலைத் திட்டத்தில் தான் நினைப்பவா்களுக்கு மட்டுமே பணி வழங்கி பொதுமக்களை வஞ்சித்து வருகிறாா். எனவே, ஊராட்சிக் கூட்டத்தில் தலைவா், துணைத் தலைவரை சரிசமமாக அமர வைத்து கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதுடன், முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.