சிதம்பரத்தில் அவர் வியாழக்கிழமை அன்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு கூட்டுறவுத்துறை மூலமாகவும், குடிமைப்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும் நியாயவிலைக்கடைகளை நடத்தி வருகிறது. கூட்டுறவுத்துறையில் 33 ஆயிரம் கடைகளும், 2 ஆயிரம் கடைகள் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் நடத்தி வருகிறது. சம வேலைக்கு, சம ஊதியம் என்ற அடிப்படையில் நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாகத்தில் பணியாற்றி வரும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு இணையாக கூட்டுறவுத்துறை நிர்வாகத்தில் பணியாற்றி வரும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சங்கம் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. மூன்று முறை ஊதியம் மாற்றம் செய்தும் கூட சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.