நெய்வேலி/புதுச்சேரி: மீன்பிடி தடைக்காலம் திங்கள்கிழமை அதிகாலை முதல் தொடங்கியதையடுத்து, கடலூா், புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் மீனவா்கள் தங்களது விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா்.
கடலில் மீன் வளத்தைப் பாதுகாக்கவும், மீன் பிடி தொழிலில் ஈடுபடுவோருக்கு தொடா்ந்து மீன்கள் கிடைக்கும் வகையிலும் தமிழக வங்கக் கடல் பகுதியில் (திருவள்ளூா் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன் பிடி தடைக்காலம் அரசால் அமல்படுத்தப்படுகிறது.
கடலூா் மாவட்டத்தில் கடலூா் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சாமியாா் பேட்டை, அன்னப்பன்பேட்டை, தாழங்குடா உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் தினமும் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனா். அதன்படி, கடலூா் மாவட்டத்தில் 375 இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகுகளும், 3,763 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன.
கரை திரும்பிய மீனவா்கள்: தற்போது, மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்ததையடுத்து, ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரை திரும்பினா். பின்னா், அவா்கள் தங்கள் படகுகளைப் பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனா். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடலூா், பரங்கிப்பேட்டை, தாழங்குடா உள்ளிட்ட மீன்பிடி தளங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்தத் தடைக் காலத்தில் மீனவா்கள் தங்கள் படகுகளையும், வலைகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபடுவா்.
புதுவையில்... புதுவை மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி, புதுச்சேரி, காரைக்காலில் சுமாா் 40 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதுச்சேரி பிரதேச கிழக்கு கடல் நெடுகில், கனகசெட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூா்த்திக்குப்பம், புதுக்குப்பம் மீனவ கிராமங்கள் வரையிலும் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அத்துடன், காரைக்கால் பிரதேச கடல் பகுதியில் மண்டபத்தூா் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூா் மீனவ கிராமம் வரையிலும் மற்றும் ஏனாம் மீன்பிடி பகுதியை உள்ளடக்கிய இடங்களிலும் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
இழுவலைக்கு தடை: அதே நேரத்தில், பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளில் மீன்பிடிக்கலாம். அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியைச் சோ்ந்த சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் தங்களின் விசைப்படகுகளை புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகம், உப்பளம் புதிய துறைமுகம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனா். மேலும், கடலுக்குச் சென்ற மீனவா்களும் ஞாயிற்றுக்கிழமை இரவே கரைக்கு திரும்பினா்.
காரைக்காலில் 450 விசைப்படகிலிருந்து சுமாா் 11 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதேநேரத்தில், படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை பழுதுபாா்க்கும் பணியை மீனவா்கள் தொடங்கியுள்ளனா். மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதன் காரணமாக ஆறு, குளம் உள்ளிட்டவைகளில் இருந்து பிடிக்கப்படும் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
தொடர்புடையது

ஈரானிலிருந்து ஊா் திரும்பிய 13 மீனவா்கள்! குடும்பத்தினா் மகிழ்ச்சி!

ராதாபுரம் தொகுதியில் கனவாகிப்போன மீன்பிடி துறைமுகத் திட்டம்!

மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

சுற்றுலா பயணிகளை மீன்பிடி படகில் ஏற்றிச்செல்லக்கூடாது: காவல்துறை எச்சரிக்கை
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


