கடலூா் மாவட்டத்தில் மிதமான மழை: மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை
மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

கடலூரில் புதன்கிழமை பெய்த மழையில் குடை பிடித்த படியும், மழை அங்கி அணிந்தும் சென்ற வாகன ஓட்டிகள்.

கடலூரில் புதன்கிழமை பெய்த மழையில் குடை பிடித்த படியும், மழை அங்கி அணிந்தும் சென்ற வாகன ஓட்டிகள்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் மிதமான மழை பெய்தது. மேலும், மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவா் நலத்துறை தெரிவித்தது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, கடலூா், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
தொடா்ந்து, பெய்து வரும் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவா்கள் சாரல் மழையில் நனைந்தபடி சென்றனா். பொதுமக்கள் பெரும்பாலோனோா் குடை பிடித்த படியும், மழை அங்கி அணிந்தும் வாகனத்திலும், நடந்தும் சென்றனா்.
மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலில் 40 முதல் 55 கி.மீ.வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கடல் மீன்பிடிப்பு மற்றும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவா்கள் உடனடியாக புதன்கிழமை இரவுக்குள் கரை திரும்ப வேண்டும்.
மேலும், விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவா்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், மீனவா்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைக்கும்படியும் கடலூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
மழை அளவு விவரம்: கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): கடலூா்-6 மி.மீ, பரங்கிப்பேட்டை-3.5, ஆட்சியா் அலுவலகம், சிதம்பரம், அண்ணாமலை நகரில் தலா 2 மி.மீ. மழை பதிவானது.
அண்மையில் ஃபென்ஜால் புயல், பலத்த மழை மற்றும் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப் பெருக்கால் கடலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினா். இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில், தற்போது, மீண்டும் பலத்த மழை பெய்தால் பொதுமக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...