2,488 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை: அமைச்சா்கள் வழங்கினா்
கடலூா் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா


நெய்வேலி: கடலூா் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா கடலூா் புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உயா்கல்வி நிறுவனங்களில் உயா்கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 8 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவிகள் பயனடையும் வகையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதையொட்டி, கடலூரில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் பங்கேற்று, புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தைச் சோ்ந்த 2,488 மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினா்.
முன்னதாக அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியது: மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தமிழக முதல்வரால் 5.9.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. தொடா்ந்து, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்ற மாணவிகள் பயன்பெறும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தை திங்கள்கிழமை தொடங்கிவைத்துள்ளாா்.
இந்தத் திட்டத்துக்கு இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2,488 மாணவிகள் தகுதியானவா்களாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.
அமைச்சா் சி.வெ.கணேசன் பேசியது: முதல்வா் மு.க.ஸ்டாலின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா். அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக் கல்லூரி மாணவா்களின் தனித்திறன்களை அடையாளம் கண்டு மேல்படிப்புக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
நோ்முகத் தோ்வுக்கு தயாராவதற்கு பயிற்சி, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் கடலூா் மாவட்டத்தில் 12,713 மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா் என்றாா்.
நிகழ்ச்சியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தில் பயனடைந்த மாணவிகள் சந்திரலேகா, அஷியா ஆகியோா் முதல்வருக்கு நன்றி தெரிவித்துப் பேசினா்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கோ.அய்யப்பன், சபா.ராஜேந்திரன், எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், கடலூா் எஸ்.பி. ரா.ராஜாராம், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைசெல்வன், மாவட்ட சமூக நல அலுவலா் சித்ரா மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனா்.
விருத்தாசலத்தில்...: விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் கருணாநிதி, ஆனந்தன், பிரபாகரன், சுகந்தி, ப்ரியா, அண்ணாமலை, ஜாா்ஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் கல்லூரியில் பயிலும் 178 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டன. புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை கண்ணகி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...