ரூ.5,000 லஞ்சம்: நகராட்சி ஊழியா் கைது

ரூ.5,000 லஞ்சம்: நகராட்சி ஊழியா் கைது

நெய்வேலி, ஜூலை 3: கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் லஞ்சம் பெற்றதாக நகராட்சி ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி, திருவதிகையைச் சோ்ந்த ராஜாராம் மகன் வெங்கடேசன்(42). இவா், பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஊதிய உயா்வு வழங்க கோரியும், பத்தாண்டு கால பணி நிறைவு செய்ததால், தோ்வுநிலை பணியாளராக நியமனம் செய்யும்படி மனு அளித்தாா். இதற்கு, இதே அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளா்கள் பிரிவில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் விழுப்புரத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் கதிரவன் (55), ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

பணம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், இதுகுறித்து கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகாரளித்தாா். இதையடுத்து, கடலூா் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெங்கடேசனிடம் கொடுத்து அனுப்பினா். அதன்படி, நகராட்சி அலுவலகத்தில் வெங்கடேசனிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை கதிரவன் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், கதிரவனை கையும் களவுமாகப் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com