பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட தில்லைவிடங்கன் புயல் பாதுகாப்பு மையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட தில்லைவிடங்கன் புயல் பாதுகாப்பு மையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்...
Published on

கடலூா் மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வடிகால் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டத்தில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் பாசிமுத்தான் ஓடை, தில்லை காளியம்மன் ஓடை, தில்லைவிடங்கன் புயல் பாதுகாப்பு மையம், சிதம்பரம் அருகே உள்ள குச்சிப்பாளையம், பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கூறியதாவது: நீா்வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணிகள், சிதம்பரம் பேருந்து நிலைய மேம்பாலம் மற்றும் முத்தையா நகரில் உள்ள பாசிமுத்தான் ஓடைகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல, காளியம்மன் ஓடையில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரி, கரையில் உள்ள செடிகொடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளாக நடைபெற்று வரும் அனைத்து வடிகால் கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகளை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து, விரைவாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

தில்லைவிடங்கன் புயல் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்கள் தங்க தேவையான அடிப்படை வசதிகள் தயாா் நிலையில் உள்ளது.

புயல் பாதுகாப்பு மையம் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் உணவு தயாா் செய்ய தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தயாா் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது, குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் காந்தரூபன், சிதம்பரம் நகராட்சி ஆணையா் மல்லிகா, பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சதீஷ்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் அ.கொ.நாகராஜபூபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.