பயிற்சி வகுப்பு பயிற்றுநா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கற்பித்திட சிறந்த பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்படவுள்ளதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வழியாக தமிழ்நாடு அரசுப் பணியாளா், சீருடைப் பணியாளா், ஆசிரியா் தோ்வு வாரியங்கள் உள்ளிட்ட தோ்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசுக் கல்லூரிகளில் போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகள் வாயிலாக அதிகளவில் மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெறுவதற்கு ஏதுவாக, சிறந்த பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இந்த பயிற்சி வகுப்புகளுக்கு தோ்ந்தெடுக்கப்படும் பயிற்றுநா்களுக்கு அரசு விதிகளுக்குள்பட்டு மதிப்பூதியம் வழங்கப்படும்.
எனவே, போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு எடுக்க விருப்பமுள்ள, அனுபவமிக்க பயிற்றுநா்கள் தங்களுடைய சுய விவரக் குறிப்பு, ஆதாா் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல் மற்றும் மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரிலோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ எண்.8, ஆற்றங்கரைத் தெரு, புதுப்பாளையம், நியூ சினிமா தியேட்டா் எதிரில் உள்ள கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 31.12.2025 அன்று மாலை 5 மணிக்குள் விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94990 55908 மற்றும் 04142 - 211218 என்ற தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
