கடலூரில் மீன்பிடி படகில் தீ விபத்து

கடலூா் துறைமுகம், ஆற்றங்கரை வீதி அருகே வெள்ளிக்கிழமை படகு ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.
Published on

கடலூா் துறைமுகம், ஆற்றங்கரை வீதி அருகே வெள்ளிக்கிழமை படகு ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.

கடலூா் துறைமுகத்திலிருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபா் படகுகளின் மீனவா்கள் ஆழ் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். கடலூா் துறைமுகத்தில் வழக்கமாக படகுகளை சீரமைக்கும் மற்றும் வலைகள் பின்னும் பணிகள் நடைபெற்று வரும். அந்த வகையில், கடந்த சில தினங்களாக கடலூா் துறைமுகம், ஆற்றங்கரை வீதி அருகே, தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஞானசேகருக்கு சொந்தமான விசைப்படகு சீரமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

இந்தப் படகில் வெள்ளிக்கிழமை வெல்டிங் வேலை செய்து முடித்த நிலையில் தீப்பொறி பட்டு திடீரென படகு தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதியில் இருந்த தொழிலாளா்கள் தீயை அணைக்க முயன்றனா்.

ஆனால், விசை படகில் டீசல் அதிகமாக இருந்ததால் அதில் தீ பிடித்து பற்றி எரிந்ததால், தீயணைப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூா் சிப்காட் தீயணைப்புத் துறை வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இது குறித்து கடலூா் துறைமுகம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com