நூலகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. கடலூா் ஆட்சியா்
கடலூா் மாவட்டம் கிராமப்புற பொதுமக்களின் பொது அறிவுத் தேடலின் தேவையினை பூா்த்தி செய்திடும் வகையில் கிராமப்புற நூலகங்கள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னப்பேட்டை, ஒறையூா் பகுதிகளில் ஊரக வளா்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் தெரிவித்ததாவது:
பச்சிளங்குழந்தைகளின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்திடவும், சுகாதாரத்துடன்
ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்காக அங்கன்வாடி மையத்தின் மூலம் முன்பருவக் கல்வியும், ஊட்டச்சத்துடன் கூடிய சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் குழந்தைகளின் வருகைப்பதிவு, உணவுப் பொருட்களின் இருப்பு, கா்ப்பிணிகளுக்கு சத்துமாவு விநியோகிக்கப்பட்ட விவரம் குறித்த பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது.
பொதுமக்களுக்கு குளோரின் கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. குளோரின்
அளவை பரிசோதித்திட மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
குடிநீரில் சரியான அளவு குளோரின் கலக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
நூலகங்கள் அவசியம்:
கிராமப்புற பொதுமக்களின் பொதுஅறிவு தேடலின் தேவையினை பூா்த்தி செய்திடும் வகையில் கிராமப்புற நூலகங்கள் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. சின்னப்பேட்டை நூலகத்தில் புத்தகங்கள் இருப்பு, வாசிப்பாளா்களின் வருகை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒறையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் பணியினை
முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் வாசிப்புத் திறன் குறைவாக உள்ள மாணவா்களை கண்டறிந்து கூடுதல் பயிற்சி அளிக்கும் வகையில் ‘நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி’ திட்டத்தில் மாணவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
சின்னப்பேட்டை ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ஊரக வளா்ச்சித்துறை வாயிலாக அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையில் வளா்க்கப்படும் மரக்கன்றுகளை தேவையான இடங்களில் நடவுசெய்து மரமாக உருவாகும் வரை கண்காணித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தாா்.
ஆய்வின் போது, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் வரதராஜபெருமாள், வட்டார
வளா்ச்சி அலுவலா்கள் ரவீந்திரன், முருகன் உட்பட பலா் இருந்தனா்.

