அரசுப் பேருந்து மோதி சின்னத்திரை நடிகா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசு நகரப் பேருந்து மோதி சின்னத்திரை நடிகா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், சீரங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பேரரசு (25). இவா், சென்னையில் சின்னத்திரை நடிகராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றி வந்தாா். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தந்தை நந்தகோபாலை பாா்க்க கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பேரரசு சொந்த ஊருக்கு வந்தாா்.
இந்த நிலையில், அவா் சீரங்குப்பம் வீட்டில் இருந்து சனிக்கிழமை காலை பைக்கில் பண்ருட்டிக்கு புறப்பட்டாா். பி.ஆண்டிக்குப்பம் குறுக்குச் சாலை அருகே சென்றபோது, ராமாபுரத்தில் இருந்து பண்ருட்டி நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்து (தடம் எண் 24) உரசியதில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பேரரசு மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியது. இதில், அவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
