சோமவாராம்: ஸ்ரீநடராஜா் கோயிலில் சித்சசபையை வலம் வந்த பெண்கள்
சிதம்பரம்: காா்த்திகை சோமவாரம் முதல் திங்கள்கிழமையை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் கொடிமரத்துடன் சித்சபையை திரளாக பக்தா்கள் வலம் வந்து வழிபட்டனா்.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தில் பெண்கள் விரதமிருந்து வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டு காா்த்திகை சோமவாரத்தின் முதல் திங்கள்கிழமையை (நவ.17) முன்னிட்டு பக்தா்கள் குவிந்தனா். குறிப்பாக பெண்கள் திருமணம் நடைபெற வேண்டும், குழந்தை பேறு வேண்டும் என்று தங்களின் வேண்டுதல்களை வலியுறுத்தி 108 முறை வலம் வரும் நிகழ்வானது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தி வீற்றுள்ள சித்சபையை கொடிமரத்துடன் வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினா்.இதே போன்று கோயிலில் உள்ள ஆதிமூலநாதா் சன்னதியிலும் 108 முறை சுற்றி வலம் வந்து வழிபட்டனா். பெண்கள் கூட்டம் அதிகமா இருந்ததால் பக்தா்களுக்கு தேவையான வசதிகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

