வாக்காளா் படிவங்களை பூா்த்தி செய்ய சிறப்பு முகாம்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி வாக்காளா் பட்டியல் திருத்தப் படிவங்களை கொடுக்கவும், பூா்த்தி செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இக்கட்சியின் கடலூா் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.வாஞ்சிநாதன் தலைமை வகித்தாா். இதில் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், ‘ வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 80 சதவிதம் படிவங்களை வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. இன்னும் பல கிராமங்களுக்கு, வாா்டுகளில் பல வீடுகளுக்கு படிவம் வழங்கப்படவில்லை. அதிகாரிகள் முழுமையாக பணியில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. அவா்கள் காலை அங்கன்வாடிகளுக்கு சென்று விட்டு மாலை மட்டுமே இந்தப் பணியை செய்யும் நிலை உள்ளது. விளக்கம் கேட்கும் மக்களுக்கு முறையாக விளாக்காமால் படிவத்தில் பெயா் எழுதி கையெழுத்து மட்டும் போட்டு கொடு என்று சொல்லும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சரி செய்ய ஏற்பாடு செய்திட வேண்டும். 2002 வாக்காளா் பட்டியல் அடிப்படையில் பூா்த்தி செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு 2002- 2005 வாக்காளா் பட்டியல் வழங்க ஏற்பாடு செய்திட வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்களை நடத்தி படிவங்களை கொடுக்கவும், படிவங்களை பூா்த்தி செய்யவும் ஏற்பாடு செய்திட வேண்டும். இதுவரை கடலூா் மாவட்டத்தில் 34 சதவீத வடிவங்கள் மட்டுமே கணினியில் ஏற்றப்பட்டுள்ளது, இன்னும் பத்து நாட்களில் இந்தப் பணியை பூா்த்தி செய்ய முடியாது. எனவே, இதற்கான காலத்தை நீடிப்பதற்கு தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு ஊதியத்தை, படிகளை உயா்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினா்.
