தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க பூமிபூஜை
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் ரூ.4.70 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக பேருந்து நிலையத்தின் சரி பாதி பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பகுதியில் பேருந்துகள் வந்து செல்கின்றன.
அண்மையில் பெய்த மழையால் பேருந்து நிலையத்தில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு, குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுநா்கள் பாதிக்கப்பட்டனா். பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டு என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இக்கோரிக்கையை ஏற்று, பேருந்து நிலையம் சீரமைக்கும் பணியை பண்ருட்டி நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள உள்ளது. இதற்காக, பண்ருட்டி - கும்பகோணம் சாலையில் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் கொட்டகை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.
பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் பங்கேற்று பூமிபூஜை செய்து பணியை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் நகராட்சி உதவிப் பொறியாளா் காா்த்திகேயன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் கதிா்காமன், நகர அவைத் தலைவா் ராஜா, பொருளாளா் ராமலிங்கம், பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் நாராயணன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் வெங்கடேசன், சண்முகவள்ளி, பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

