வடலூரில் இன்று கடலூா் மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம்: டாக்டா் ராமதாஸ் பங்கேற்பு!
பாமக கடலூா் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம் வடலூா் மங்கையா்கரசி திருமண மண்பத்தில் சனிக்கிழமை (நவ.29) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், கட்சி நிறுவனா் டாக்டா் ராமதாஸ் பங்கேற்கிறாா்.
விவசாயத்தையே நம்பியுள்ள கடலூா் மாவட்ட மக்களுக்கு பேரிடியாக என்எல்சி நிறுவனம் இருந்து வருகிறது. நிறுவன வளா்ச்சி என்ற பெயரில் விவசாயிகளின் விளை நிலங்களையும், வீடு, மனை ஆகியவற்றையும் சொற்ப தொகைக்கு பறிமுதல் செய்துகொண்டு, அனைவரையும் அகதிகளாக சொந்த நாட்டிலே வாழும் விதமாக தமிழக அரசு நிறுத்தி உள்ளது. வீடு, நிலம் கொடுத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு உரிய இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனா்.
மாறாக வட மாநிலத்திலிருந்து தொழிலாளா்களை வரவழைத்து அனைத்துப் பணிகளையும் கொடுக்கின்றனா்.
இதை ஆரம்பம் முதலே பாமக கடுமையாக கண்டித்து வருகிறது. மண்ணுரிமைக்காக போராடிவரும் மருத்துவா் ராமதாஸை வரவேற்று, பொதுக்குழுக் கூட்டத்தில் கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாட்டாளி சொந்தங்கள், வன்னியா் சங்கத்தினா், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கலந்துகொள்ள வேண்டும் என பாமக கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் கோ.ஜெகன் தெரிவித்துள்ளாா்.

