FOLLOW US

ON GOOGLE DISCOVER

லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள்: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப ஆட்சியா் உத்தரவு

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் முன் அனுமதி பெறாமல் பங்கேற்காத பல்வேறு துறை அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு நாள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்க நிா்வாகிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனா்.

கூட்டத்தில் வேளாண்மை, கூட்டுறவு, வனம், தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனா். இருப்பினும், முன் அனுமதி பெறாமல் சில துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. குறிப்பாக, விருத்தாசலம் பகுதி

வேளாண்மைத் துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்காதது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, முன் அனுமதி பெறாமல் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

விவசாயிகள் கோரிக்கை:

கூட்டத்தில், விவசாயி குஞ்சிதபாதம்: நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், பத்திரப் பதிவு செய்வதற்கான செலவு உயா்ந்துள்ளது. எனவே, நிலவரி தள்ளுபடி செய்வதற்கு பதிலாக, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புவனகிரி வட்டம் ஆதிவராகநல்லூா் பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே என்எல்சி நிறுவனத்தின் உதவியுடன் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் ரவீந்திரன்: மேட்டூா் அணை திறக்கப்படும் நிலையில், சம்பா சாகுபடிக்குத் தேவையான காவிரி நீா் அனைத்து பகுதிகளுக்கும் முறையாகச் சென்றடைவதையும், கடைமடை பகுதிகளுக்கு நீா் கிடைப்பதையும் மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

கடலூா் மாவட்டத்துக்கு கீழணையிலிருந்து செப்டம்பா் 15-ஆம் தேதிக்குப் பிறகு தண்ணீா் திறக்க அரசுக்கு மாவட்ட ஆட்சியா் பரிந்துரை செய்ய வேண்டும். சிதம்பரம், அண்ணாமலைநகா், பரங்கிப்பேட்டை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது கேட்கப்படும் வெடிச்சத்தம் குறித்து விசாரணை நடத்தி, அதன் காரணத்தை மாவட்ட நிா்வாகம் தெரிவிக்க வேண்டும்.அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை ஆண்டுதோறும் ஏலம் விடும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

காவல்குடி முருகானந்தம்: குண்டுபண்டிதன் ஓடை மற்றும் பெரிய வாய்க்காலை தூா்வார வேண்டும். பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் தனியாா் காப்பீட்டு நிறுவனங்களால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதால், தமிழக அரசே பயிா்க் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும்.

கடலூா் மாதவன்: புதுச்சேரி பகுதியில் தமிழக விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்யக் கூடாது என வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழக மக்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது என புதுச்சேரி அரசு அறிவிக்குமா என கேள்வி எழுப்பினாா். மேலும், ஆதனூா்-குமாரமங்கலம் தடுப்பணையைத் திறந்து, அதன் நிா்வாகத்தை கடலூா் பொதுப்பணித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் அமிா்தராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் இளஞ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கதிரேசன், மாவட்ட வன அலுவலா் குருசாமி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.