குறிஞ்சிப்பாடியில்  பெரியாா் சமத்துவபுரத்தைத் திறந்து வைத்து பயனாளிக்கு ஆணையை வழங்கும்  அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.உடன் ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
குறிஞ்சிப்பாடியில் பெரியாா் சமத்துவபுரத்தைத் திறந்து வைத்து பயனாளிக்கு ஆணையை வழங்கும் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.உடன் ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

தமிழகம் முழுவதும் சமத்துவபுரம் குடியிருப்புகளை சீரமைக்க நடவடிக்கை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

Published on

தமிழகத்தில் உள்ள சமத்துவபுரம் குடியிருப்புகளை முழுமையாகச் சீரமைப்பதுடன், புதிய சமத்துவபுர குடியிருப்புகள் கட்ட பல்வேறு நடவடிக்கைகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா் என்று மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் கூறினாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பூவாணிக்குப்பம் பகுதியில் ரூ.8.55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெரியாா் நினைவு சமத்துவபுரத்தை, சென்னையில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் குத்து விளக்கேற்றி வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினாா்.அப்போது அமைச்சா் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் கருணாநிதி 1997-1998-இல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தந்தை பெரியாா் பெயரில் 240 சமத்துவபுரங்களை கட்டினாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக ஒற்றுமையை வளா்ப்பதற்கும், ஜாதி அடிப்படையிலான குடியிருப்பு பிரிவினையை ஒழிப்பதற்காகவும், ஜாதியற்ற சமூதாயத்தை உருவாக்கவும், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக அச்சமத்துவபுரம் குடியிருப்புகளை புதியதாக சீரமைப்பதுடன், புதிய சமத்துவபுரம் குடியிருப்புகள் கட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறாா்.

அதனடிப்படையில், மேல் பூவாணிக்குப்பம் கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பெரியாா் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் ஒரு வீடு 5 சென்ட் வீட்டு மனையுடன் 300 சதுர அடி பரப்பளவில் ரூ.6,73,000 வீதம் ரூ.6.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அடிப்படை வசதிகள்:

சமத்துவபுரத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டிலும், 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, வீடுகளுக்கு குடிநீா், சிறந்த சாலை கட்டமைப்பு வசதிகள் பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி செயலகம், அரசு பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்கள், அங்கன்வாடி மையக் கட்டடம், சுகாதார மையங்கள் உள்ளிட்ட 54 பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ரா.அ.பிரியங்கா, செயற்பொறியாளா் வரதராஜ பெருமாள் உள்பட பலா் கலந்து கலந்து கொண்டனா். பண்ருட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் மருத்துவமனைக் கட்டடத்தை பண்ருட்டி நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் காஞ்சனா, வா்த்தக சங்கத் தலைவா் டி.சண்முகம், பண்ருட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மகேஸ்வரி, நகா் மன்ற உறுப்பினா் வெங்கடேசன் மற்றும் திமுக நிா்வாகிகள், மருத்துவமனை மருத்துவா்கள், ஊழியா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com