கூட்டத்தில் பேசிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா். உடன் ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா். உடன் ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

பால் உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்! - கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

Published on

கடலூா் மாவட்டம், குமராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூடுவெளிசாவடியில் புதிதாக அமைக்கப்படவுள்ள தொகுப்பு பால் குளிா்விப்பு மையம் மூலம் இப்பகுதி பால் உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

காட்டுமன்னாா்கோவில் வட்டத்துக்குள்பட்ட கூடுவெளி அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி அரங்கத்தில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில், காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.சிந்தனைச்செல்வன் முன்னிலையில், தமிழக அரசு அறிவிப்பின்படி கூடுவெளிசாவடியில் தொகுப்பு பால் குளிா்விப்பு மையம் அமைப்பது, பால் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து துறை சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது: தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி கூடுவெளிசாவடியில் புதிதாக அமைக்கப்படும் தொகுப்பு பால் குளிா்விப்பு மையத்துக்குத் தேவைப்படும் பாலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கூடுவெளிசாவடி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேன்மையடையும் வகையிலும், குறிப்பாக ஆதிதிராவிடா் மக்களின் பொருளாதாரத்தை உயா்த்திடும் வகையிலும் பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களை தாட்கோ அல்லது பொது சங்கங்களாக பதிவு செய்து, அதன் மூலம் பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்துடன் கறவை மாட்டுக்கடன் வழங்கப்படவுள்ளது.

இதில், ஒரு பயனாளிக்கு இரண்டு கறவை மாடுகள் வீதம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக குறைந்தபட்சம் 500 பயனாளிகளை கொண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், பயனாளிகளிடமிருந்து வரப்பெறும் கூடுதல் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

பால் குளிா்விப்பு மையத்தின் அருகிலேயே பசுந்தீவனப் புல், கலப்பு தீவனம் உள்ளிட்ட தீவனங்கள் உற்பத்தி செய்து, பால் உற்பத்தியாளா்களுக்கு மானிய விலையில் தீவனம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிா்ணயிக்கப்பட்ட தரத்தில் பால் வழங்கும் பயனாளிகளுக்கு ஆவின் மூலம் லிட்டருக்கு தற்போது ரூ.38.50 வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கூடுவெளிசாவடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மகளிா் இத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பாண்டி, ஆவின் பொது மேலாளா் அருணகிரிநாதன், தாட்கோ மாவட்ட மேலாளா் லோகநாதன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com