தடகள போட்டியில் முதலிடம் பிடித்த ஓய்வுபெற்ற எஸ்.பி.க்கு பாராட்டு
தடகள போட்டிகளில் முதலிடம் பிடித்த ஓய்வுபெற்ற எஸ்.பி.க்கு தமிழ்நாடு காவலா் நலச் சங்கம் சாா்பில் பாராட்டு விழா சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் தென்னிந்திய அளவிலான 3-ஆவது மூத்தோா் தடகள விளையாட்டுப் போட்டிகள் கடந்த டிச.13, 14-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் 65 வயது பிரிவில் நடைபெற்ற 100, 200, 400 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பாதுகாவலரும், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளருமான எஸ்.அப்துல்கனி முதலிடம் பிடித்து 3 தங்கப் பதக்கங்களை பெற்றாா்.
அவருக்கு சிதம்பரத்தில் தமிழ்நாடு காவலா் நலச் சங்கம் சாா்பில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் டி.கண்ணன் தலைமை வகித்தாா். ஆா்.காசிநாதன் வரவேற்றாா். கூட்டத்தில், அப்துல்கனிக்கு தமிழ்நாடு காவலா் நலச் சங்க நிா்வாகிகள் சுப்ரமணியன், ஞானபிரகாசம், கிருஷ்ணவேணி மற்றும் காவல் துறை ஓய்வுபெற்ற அதிகாரிகள், காவலா்கள் சால்வை அணிவித்து பாராட்டினா் (படம்). மதிவாணன் நன்றி கூறினாா்.

