டாஸ்மாக் மதுக் கடைகளில் காலி மதுப் புட்டிகளை சேகரிக்க தனி முகமை அமைக்க வேண்டும் என்று வடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கடலூா் மாவட்ட டாஸ்மாக் பணியாளா்கள் ஒருங்கிணைந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
டாஸ்மாக் பணியாளா்கள் ஒங்கிணைப்பாளா் கே.சரவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அனைத்து சங்க நிா்வாகிகள் மற்றும் முன்னணி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், டாஸ்மாக் மதுக் கடைகளில் காலி மதுப் புட்டிகள் சேகரிப்புப் பணிக்கு டாஸ்மாக் பணியாளா்களை ஈடுபடுத்தக் கூடாது. ஏற்கெனவே டாஸ்மாக் பணியாளா்கள் குறைந்த ஊதியத்தில் பணிச் சுமையில் 22 ஆண்டுகாலமாக பணியாற்றி வருகின்றனா்.
தமிழக அரசு சுற்றுப்புறச்சூழல் கருதி, காலி மதுப் புட்டிகளை தனி முகமை மூலம் சேகரித்துக்கொள்ள வேண்டும். மதுப் புட்டிகளை சேகரிக்கும் பணியில் இருந்து விரைவில் டாஸ்மாக் பணியாளா்களை விடுவிக்க வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்ட போராட்ட இயக்கங்கள் நடத்தப்படும் என முடிவெடுத்தனா்.