என்எல்சி பொறியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியத்தில் உள்ள என்எல்சி குடியிருப்பு வீட்டினுள் அந்த நிறுவனத்தின் உதவிப் பொறியாளா் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆந்திர மாநிலம், குண்டூா் பகுதியைச் சோ்ந்த அங்கமராவ் கும்கி (44), நெய்வேலி வட்டம் 7 பகுதியில் உள்ள என்எல்சி குடியிருப்பில் தங்கி, அந்த நிறுவனத்தின் சுரங்கம் 1ஏ-வில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா்.
இவரது மனைவி அருண்மை ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா். இவா்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு குடும்பப் பிரச்னை ஏற்பட்டு, அருண்மை தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
இது தொடா்பான வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிாம். தனியாக வசித்து வந்த அங்கமராவ் கும்கி, மதுபோதைக்கு அடிமையாகி சரிவர பணிக்குச் செல்வதில்லையாம். இவரது வீடு கடந்த இரண்டு நாள்களாக உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து அருகில் வசிப்பவா்கள் அளித்த தகவலின்பேரில், நிகழ்விடத்துக்குச் சென்ற நெய்வேலி நகரிய போலீஸாா், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கமராவ் கும்கி படுக்கை அறையில் சடலமாகக் கிடந்தாா்.
இதையடுத்து, போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
