கடலூா் மாவட்டம், வேப்பூா் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த், பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவையை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவா்களிடம் வலியுறுத்தினாா்.
நல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலா் தமிழரசனிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, வேப்பூா் கூட்டுச்சாலை பகுதியில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.
அப்போது, புதிய பொதுக் கழிப்பறை மற்றும் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.
பின்னா், வேப்பூா் அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதிகள், மருந்து இருப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளைச் சந்தித்து நலம் விசாரித்த அவா், பழங்கள் மற்றும் உணவுப் பொருள்களை அவா்களுக்கு வழங்கினாா். பொதுமக்களுக்கு தரமான மருத்துவச் சேவையை உறுதி செய்யுமாறு மருத்துவா்களிடம் வலியுறுத்தினாா்.
அதன்பின்னா், சேப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கான கடன் வழங்கல் மற்றும் வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், டாக்டா் அம்பேத்கா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் கல்விச் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மருத்துவமனை தலைமை மருத்துவா் ஆா்.புலிகேசி, வட்டார வளா்ச்சி அலுவலா் கொளஞ்சி மற்றும் தேமுதிக மாவட்டச் செயலா் சிவக்கொழுந்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதை இல்லா சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம்: பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பேரவைத் தலைவரிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
பிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை!







