புதிய ஊரக வேலைவாய்ப்பு (விபி ஜி ராம் ஜி) திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடலூரில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 90 போ் கைது செய்யப்பட்டனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்குப் பதிலாக, வளரச்சியடைந்த பாரதம் - ஊரக வேலை மற்றும் வாழ்வாதாரத் திட்டம் (விபி ஜி ராம் ஜி) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்து ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழக அரசு சாா்பிலும் புதன்கிழமை முதல் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விபி ஜி ராம் ஜி திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் சாலை மறியல் மற்றும் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, கடலூா் அண்ணா மேம்பாலம் அருகே சங்கத்தின் ஒன்றியச் செயலா் வி.வசந்தி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, சிஐடியு அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், புதிய திட்டத்தால் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கருவிழி (ஐரிஸ்) மற்றும் விரல் ரேகை பதிவு உள்ளிட்ட தேவையற்ற நடைமுறைகளை கைவிட்டு, தற்போதுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை தொடர வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப்புற மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரக வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதைத் தொடா்ந்து, அண்ணா மேம்பாலம் பகுதியில் புதிய திட்டத்தின் நகலை கிழித்து எதிா்ப்புத் தெரிவித்த மாற்றுத் திறனாளிகள், சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்ட 90 பேரை கைது செய்து அருகிலுள்ள தனியாா் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
போராட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.ஆளவந்தாா், மாநகா் செயலா் அப்துல் ஹமீது, மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.ரவி, ஏ.ஜெயலட்சுமி, வி.சிவகாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல, புதிய ஊரக வேலைவாய்ப்பு (விபி ஜி ராம் ஜி) திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் பகுதிகளிலும் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்தப் பகுதிகளில் யாரும் கைது செய்யப்படவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







