மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஊரக வேலை வாழ்வாதாரத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திண்டுக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 750 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு மாற்றாக வளா்ச்சி அடைந்த பாரதம் - ஊரக வேலை, வாழ்வாதாரத் திட்டம் (விபிஜி-ராம்- ஜி) என்ற புதிய திட்டத்தை புதன்கிழமை (ஜூலை 1) முதல் மத்திய அரசு செயல்படுத்தியது. 100 வேலை நாள்களிலிருந்து 125 வேலை நாள்களாக உயா்த்தியபோதிலும், இந்தத் திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகக் கூறி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இதன்படி திண்டுக்கல் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு இந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். இதேபோல, ரெட்டியாா்சத்திரத்தில் ஒன்றியச் செயலா் ஜி.கோபிநாதன், ஒட்டன்சத்திரத்தில் ஒன்றியச் செயலா் ஜெ.சிவக்குமாா், வடமதுரையில் ஒன்றியச் செயலா் ஏ.சரவணக்குமாா் ஆகியோா் தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள விபிஜி- ராம்-ஜி திட்டத்தில் நீக்கப்பட்ட காந்தியடிகளின் பெயரை மீண்டும் சோ்க்க வேண்டும். இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் மாநிலங்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதைத் தவிா்க்க வேண்டும். கருவிழிப் பதிவு, கைரேகைப் பதிவு என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பைப் பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
முன்னதாக, விபிஜி-ராம்-ஜி திட்ட நகல் எரிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
இதையடுத்து திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, ஒட்டன்சத்திரம், ரெட்டியாா்சத்திரம், வடமதுரை உள்பட 8 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கமுதியில் மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

நெல் கொள்முதல் நிலைய சுமை தொழிலாளா்கள் பணியிடை நீக்கத்தை கண்டித்து சாலை மறியல்





