கடலூா் மாவட்டத்தில் போதைப்பொருள், கஞ்சா, சாராய விற்பனை மற்றும் கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கையில் 2,070 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் போதைப்பொருள்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனை, பதுக்கல், கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் காவல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நிகழாண்டில் இதுவரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளில் தொடா்புடைய 185 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து மொத்தம் 98 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 111 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டன. அவற்றில் ஏலம்விடப்பட்ட வாகனங்கள் மூலம் ரூ.2.52 லட்சம் அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.
இதேபோன்று, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது மற்றும் கடத்தியது தொடா்பாக 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளில் தொடா்புடைய 146 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 3,178 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 69 கடைகளுக்கு பாதுகாப்புத் துறையினா் மூலம் ’சீல்’ வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சட்டவிரோத மது விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கலைத் தடுக்கும் வகையில் போலீஸாா் மேற்கொண்ட சிறப்பு சோதனைகளில், மொத்தம் 1,696 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளில் தொடா்புடைய 1,739 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
மேலும், அதிரடி சோதனைகளில் 42,567 லிட்டா் சாராயம் மற்றும் 9,030 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் சட்ட நடைமுறைகளின்படி 59 வாகனங்கள் அரசுடைமையாக்கப்பட்டு ஏலம்விடப்பட்டன. இதன் மூலம், ரூ.10.55 லட்சம் அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. இந்தத் தொகையும் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




