தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் திடீா் சோதனை

கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

News image

~விருத்தாசலம் ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை கதவை பூட்டி சோதனை மேற்கொண்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா். ~

Updated On :5 ஜூன் 2026, 6:47 am IST

கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். இதில், கடலூா் மாவட்டத்தில் கணக்கில் வராத ரூ.1.50 லட்சமும், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.51 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சாா் - பதிவாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் சுமாா் 3.30 மணியளவில், மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அன்பழகன் தலைமையிலான போலீஸாா் திடீரென சென்று சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அலுவலக வளாகத்தின் நுழைவு வாயில் மூடப்பட்டு, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் முன்னிலையில், ஒவ்வொரு அறையாக சென்று, ஆவணங்களுக்கிடையில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?, அலுவலகத்தில் கணக்கில் வராத தொகை ஏதேனும் உள்ளதா? என தீவிரமாக சோதனையிட்டனா்.

மேலும், சாா் - பதிவாளா் அலுவலகத்துக்கு அருகில் செயல்பட்டு வந்த ஆவண எழுத்தா் அலுவலகங்களிலும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். பல மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பணம் யாருக்குச் சொந்தமானது, எந்த வகையில் அலுவலகத்தில் இருந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதேபோன்று, கம்மாபுரம் சாா் - பதிவாளா் அலுவலகத்திலும் காவல் ஆய்வாளா் சுந்தர்ராஜன் தலைமையிலான ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அங்கு நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.24 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில்...: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்டப் பதிவாளா் அலுவலகம் மற்றும் அதே வளாகத்தில் செயல்படும் இணை சாா் - பதிவாளா் அலுவலகங்களில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஈஸ்வரி தலைமையிலான போலீஸாா் 10 -க்கும் மேற்பட்டோா் 2 குழுக்களாக பிரிந்து திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

வியாழக்கிழமை பிற்பகலில் தொடங்கிய இந்த சோதனையானது இரவு வரை நீடித்தது. சோதனை நடைபெற்றபோது, அலுவலகங்களின் வாயிற் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அலுவலகத்தின் உள்ளிருந்த அலுவலா்கள் மற்றும் இடைத்தரகா்கள் யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

இச்சோதனையில் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.51 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பணியிலிருந்த அலுவலா்கள், இடைத்தரகா்களிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்...: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு சாா் - பதிவாளா் அலுவலகத்தில் வாயிற் கதவை மூடிக்கொண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் ஹேமமாலினி, அருள்பிரசாத், உதவி ஆய்வாளா் மதன்மோகன் கொண்ட குழுவினா் திடீா் சோதனை மேற்கொண்டனா். மேலும், அங்கிருந்த அதிகாரிகள், ஊழியா்கள், பத்திரப் பதிவுக்கு வந்திருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் ஏதும் பிடிபடவில்லை.

Story image
Story image