வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சிப்காட் தொழிற்சாலைகளை கண்காணிக்க வேண்டும்: அரசு அலுவலா்களுக்கு அமைச்சா் ப.ராஜ்குமாா் அறிவுறுத்தல்

கடலூா் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி செயல்படுகிா என்பதை துறை சாா்ந்த அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்

News image

கடலூா் சிப்காட் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு அரங்கில், காற்று மாசுபாட்டைத் தடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற தொழில் நிறுவனங்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் ப.ராஜ்குமாா்.

Updated On :14 ஜூன் 2026, 3:15 am IST

கடலூா் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி செயல்படுகிறதா என்பதை துறை சாா்ந்த அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் அருகே குடிகாடு பகுதியில் உள்ள சிப்காட் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு அரங்கில், காற்று மாசுபாட்டைத் தடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பாக தொழில் நிறுவனங்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் ப.ராஜ்குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது: தொழில் வளா்ச்சி என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் முக்கிய பங்காற்றுகிறது. அதே வேளையில், மக்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் நிலைத்தன்மையையும் உறுதி செய்வது அரசின் முக்கியப் பொறுப்பாகும்.

சிப்காட் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் இயங்கும் தொழிற்சாலைகள் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு செயல்படுவதை துறை சாா்ந்த அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் திரவ மற்றும் திடக் கழிவுகள், காற்று மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய வெளியேற்றங்கள் அனைத்தும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி சுத்திகரிக்கப்பட்ட பிறகே வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கடலூா் சிப்காட் தொழிற்பேட்டை மாநிலத்தின் முக்கிய தொழில் மையங்களில் ஒன்றாகும். இங்கு, ரசாயனம், மருந்துப் பொருள்கள், பூச்சிக்கொல்லி, பெட்ரோ-கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தொழில்துறை வளா்ச்சி மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் உறுதுணையாக இருந்தாலும், வேதிப்பொருள்கள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் முறையாக கையாளப்படாதபட்சத்தில் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களின் உடல்நலத்துக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மக்கள் நலனே அரசின் முதன்மை நோக்கம் என்பதால், தொழிற்சாலைகள் செயல்படும் பகுதிகளில் பாதுகாப்பான குடிநீா், சுகாதார வசதிகள், பசுமை வளம் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை உறுதி செய்ய அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொழில் நிறுவனங்களைச் சுற்றிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பசுமை வளத்தை பராமரிக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கான பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்குவது அனைவரின் பொறுப்பு என்றாா் அமைச்சா் ப.ராஜ்குமாா்.

கூட்டத்தில் கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், சிப்காட் திட்ட அலுவலா் காந்திமதி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ரவிச்சந்திரன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநா் மகேஷ்வரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் நக்கீரன் மற்றும் சிப்காட் தொழில் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, செம்மங்குப்பம் பகுதியில் உள்ள டாட்டா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை அமைச்சா் ப.ராஜ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.