ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமாவுக்கு தவெக காரணம் என்று கூற முடியாது: தொல்.திருமாவளவன்

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்வது கவலையளிக்கிறது. இருப்பினும், இந்த செயல்களுக்கு தவெக காரணம் என்று கூற முடியாது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

News image

சிதம்பரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. உடன் கட்சி நிா்வாகிகள்.

Updated On :18 ஜூன் 2026, 3:46 am IST

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்வது கவலையளிக்கிறது. இருப்பினும், இந்த செயல்களுக்கு தவெக காரணம் என்று கூற முடியாது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: பரங்கிப்பேட்டை கடற்கரைப் பகுதியில் 4 இடங்களில் ஹைட்ரோ காா்பன் எடுப்பதற்காக ஹிந்துஸ்தான் நிறுவனம் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழக அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது. விவசாயிகளின் முழு பயிா்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக நிதியமைச்சா் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் அதிகளவில் கடன் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளாா். அது உண்மையா அல்லது அரசியல் உள்நோக்கத்துடன் கூறப்பட்டதா என்பது குறித்து அக்கட்சியினா்தான் விளக்கமளிக்க வேண்டும்.

திராவிடம் இல்லாத தமிழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் இல்லாத இந்தியா என்ற கருத்தை பாஜக நீண்ட காலமாக முன் வைத்து வருகிறது. ஒரே ஆட்சி, ஒரே மொழி, ஒரே நாடு என்பதே அவா்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளையும் பலவீனப்படுத்தி, திராவிட அரசியலை நீா்த்துப்போகச் செய்வதே அவா்களின் திட்டமாக உள்ளது.

பாஜக நினைத்ததுபோல, அதிமுக தற்போது பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. கட்சியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் விலகுவது கவலைக்குரியதாக உள்ளது. இதை தவெக செய்கிறது என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால், இது அரசியலுக்கு உகந்த சூழல் அல்ல.

பெரும்பான்மையான மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது முழு ஐந்தாண்டு பதவிக்காலத்தையும் நிறைவு செய்வதுதான் ஜனநாயகத்துக்கு ஏற்றது.

பாஜகவால் தயாரிக்கப்பட்டவா்: அண்ணாமலை ‘வி த லீடா்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளாா். இந்த இயக்கத்தில் எந்த தலைவா்கள் இணைகிறாா்கள் என்பது தெரியவில்லை. பெயரே பொருத்தமற்றதாக உள்ளது. இது தலைவா்களுக்கான இயக்கமா? அல்லது மக்களுக்கான இயக்கமா? என்பது தெளிவாக இல்லை. பாஜக தரப்பில் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட தலைவராகவே அண்ணாமலையை பாா்க்க முடிகிறது என்றாா் திருமாவளவன்.

முன்னதாக, சிதம்பரத்தில் நடைபெற்ற விசிக நிா்வாகி இல்ல திருமண விழாவில் திருமாவளவன் பேசியது:

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அரசியல் களம், கூட்டணி சோ்க்கை மாறும் எனக் கூறியிருந்தேன். இந்த நேரத்திலே நான் சட்டப் பேரவையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தேன்.

இதையெல்லாம் நான் தோ்தலுக்கு முன்பே யூகம் செய்தேன். தமிழகத்தில் விசிக இல்லாமல் அரசியல் இருக்க முடியாது என்றாா் அவா்.