தமிழகத்தில் மின் வசதியில்லாத கிராமங்களே இல்லை - அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்


தமிழகத்தில் மின் வசதியில்லா கிராமங்களே இல்லை என்று வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பெருமிதம் தெரிவித்தாா்.
சிதம்பரம் அண்ணாமலை நகரில் ரூ.262 கோடி மதிப்பீட்டிலான 230 கே.வி. துணை மின் நிலையத்துக்கு அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் 209 பயனாளிகளுக்கு ரூ.8,43,19,399 மதிப்பீட்டிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டா ஆணைகளை வழங்கி அமைச்சா் பேசியதாவது:
தமிழகத்தில் மின் வசதியில்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைக்கு முன்னேறி, தற்போது அனைத்து கிராமப் பகுதிகளும் மின் வசதிகளுடன் உள்ளன. கிராமங்கள் மற்றும் நகரங்கள் என அனைத்து இடங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்கிடும் பொருட்டு, கூடுதலாக மின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், சிதம்பரம் நகராட்சியில் திருவக்குளம் கிராமத்தில் 5.26 ஹெக்டோ் பரப்பளவில் ரூ.262 கோடி மதிப்பீட்டில் 230 கே.வி. துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2 புதிய 160 எம்விஏ தானியங்கி மின்மாற்றி வசதிகளுடன் துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இதனால், நெய்வேலி, கடலங்குடி, கடலூா் துணை மின் நிலையங்களுக்கு மின்சுமை குறைப்பு ஏற்படும். சீரான மின் விநியோகம் வழங்கும் பொருட்டு, சிதம்பரம், பி.முட்லூா், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னாா்கோவில், தோப்புக்கொல்லை ஆகிய 110 கே.வி. துணைமின் நிலையங்களுடன் இணைக்கப்படும். மேலும், இத்துணை மின் நிலையம் அமைக்கப்படுவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சார வசதி கிடைக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக தலைமைப் பொறியாளா் கோ.சதாசிவம் வரவேற்று பேசுகையில், கடலூா் மாவட்டத்தில் ரூ.1,714 கோடி மதிப்பீட்டில் மின் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சிக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.சிந்தனைசெல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக, சிதம்பரம் நகராட்சி கச்சேரித் தெருவில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் தமிழக முதல்வரால் காணொலி மூலம் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்ட சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகா் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சோ்ந்த 10 ஊரக ஊராட்சிகளுக்குள்பட்ட குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீா்த் திட்டப்பணிகள் ரூ.255.64 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட பணியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிகளில் சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், சிதம்பரம் நகராட்சி ஆணையா் த.மல்லிகா, நகராட்சிப் பொறியாளா் சுரேஷ், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக தலைமைப் பொறியாளா் கோ.சதாசிவம், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக மேற்பாா்வை பொறியாளா் க.சரவணதுரைமுருகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன், அண்ணாமலைநகா் பேரூராட்சித் தலைவா் கே.பழனி, சிதம்பரம் நகா்மன்ற மூத்த உறுப்பினா்கள் அப்புசந்திரசேகரன், ஏ.ஆா்.சி.மணிகண்டன், ரா.வெங்கடேசன், பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...