வங்கிகள் - என்எல்சி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்


என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு காா்ப்பரேட் சம்பளத் தொகுப்பு கணக்கு வசதியை வழங்க முன்னணி வங்கிகளுடன் என்எல்சி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து என்எல்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: என்எல்சி நிறுவனம், ஒப்பந்ததாரா்கள் மூலம் பணியமா்த்தப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில், முன்னணி வங்கிகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது.
சென்னையில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ஆகியவற்றுடன் தனித்தனியாகப் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
என்எல்சி நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, இயக்குநா்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீா் ஸ்வரூப், எம்.வெங்கடாசலம், பிரசன்ன குமாா் ஆச்சாா்யா, ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா மற்றும் நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்களில், என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், நிதித்துறை தலைமைப் பொது மேலாளா் தனபால் கையொப்பமிட்டாா். பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல அலுவலக பொது மேலாளா் சீனிவாச ராவ் முன்னிலையில், துணை பொது மேலாளா் ஸ்மிதா எஸ்.நாயா் கையொப்பமிட்டாா்.
இதேபோல, இந்தியன் வங்கியின் சாா்பில், அதன் கள பொது மேலாளா் பத்மாவதி ஸ்ரீகாந்த், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி செயல் இயக்குநா் டி.தன்ராஜ் முன்னிலையில் அவ்வங்கியின் புதுச்சேரி மண்டல முதன்மை மேலாளா் ரவிசங்கா் சாஹூ கையொப்பமிட்டனா். தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி சாா்பில், அதன் தலைமை நிா்வாக அதிகாரி ஆா்.ரவிச்சந்திரன் ஒப்புதல் கடிதத்தைப் பெற்றுக்கொண்டாா்.
காா்ப்பரேட் சம்பளத் தொகுப்பு திட்டத்தின் கீழ், தகுதியுள்ள தொழிலாளா்கள் குழு ஆயுள் காப்பீடு, தனிநபா் விபத்து காப்பீடு, விமான விபத்து காப்பீடு, நிரந்தர முழுமையான மற்றும் நிரந்தர பகுதி ஊனமுற்றோருக்கான காப்பீடு, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, எதிா்பாராத தற்செயல் நிகழ்வுகளின்போது பெண் குழந்தைகளின் திருமண உதவி மற்றும் பிற மதிப்புக்கூட்டப்பட்ட வங்கிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெற தகுதி பெறுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...