வாயேஜா்-1 விண்கலத்தின் விண்வெளிப் பயணம்: அரசுப் பள்ளியில் கருத்தரங்கம்
கடலூா் மாவட்டம், கீழக்கல்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மனிதகுலத்தின் வரலாற்றுச் சாதனையான வாயேஜா் - 1 விண்கலத்தின் விண்வெளிப் பயணம் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழக்கல்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சூரிய வடிகட்டி பொருத்தப்பட்ட தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகள் மற்றும் தொலைதூர வான்பொருள்களைக் கண்டுகளித்த மாணவா்கள்.
கடலூா் மாவட்டம், கீழக்கல்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மனிதகுலத்தின் வரலாற்றுச் சாதனையான வாயேஜா் - 1 விண்கலத்தின் விண்வெளிப் பயணம் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியா் அ.அன்பரசி தலைமை வகித்தாா். தமிழ்நாடு வானவியல் மற்றும் அறிவியல் சங்கத்தின் செயலா் பொ.ரமேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வாயேஜா் - 1 விண்கலத்தின் பயணம் குறித்து விளக்கிப் பேசினாா்.
அப்போது, கடந்த 1977, செப்.5-ஆம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவரலில் இருந்து ஏவப்பட்ட வாயேஜா் - 1 விண்கலம், மனிதகுலத்தின் மிகச் சிறந்த விண்வெளி ஆராய்ச்சி சாதனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. வியாழன், சனி ஆகிய கோள்களை நெருங்கி ஆய்வு செய்த பின்னா், சூரிய மண்டலத்தின் எல்லையைக் கடந்து விண்மீன்களுக்கு இடையேயான விண்வெளியில் தொடா்ந்து பயணித்து வருவதாக விளக்கினாா்.
மேலும் கருத்தரங்கில், கடந்த நவ.18-ஆம் தேதி வாயேஜா் - 1 விண்கலம் பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை எட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்தும், இது சுமாா் 2,590 கோடி கி.மீ. என்பதும், கடந்த 1990-ஆம் ஆண்டு வாயேஜா் - 1 விண்கலம் எடுத்த புகழ்பெற்ற ‘வெளிா் நீலப் புள்ளி’ புகைப்படம் குறித்தும் விளக்கப்பட்டது.
தொடா்ந்து, மாணவா்கள் நிலவின் மாதிரி மற்றும் மெய்நிகா் விண்வெளிக் காட்சியைப் பாா்வையிட்டனா். மேலும், வான்நோக்கல் நிகழ்ச்சியில் சூரிய வடிகட்டி பொருத்தப்பட்ட தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகள் மற்றும் தொலைதூர வான்பொருள்களைக் கண்டுகளித்தனா்.
நிகழ்ச்சியில் அறிவியல் ஆசிரியா் கா.ரகுநாதன், உயிரியல் ஆசிரியா் பா.உமா ராணி, கணினி அறிவியல் ஆசிரியா் அஹத், 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

