தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.1.66 கோடி மோசடி: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் கைது
தீபாவளி பண்டு சீட்டு நடத்துவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.1.66 கோடி வசூல் செய்து மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேரை கடலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

ராஜன்
தீபாவளி பண்டு சீட்டு நடத்துவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.1.66 கோடி வசூல் செய்து மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேரை கடலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், மஞ்சக்குப்பம் உப்பலவாடி பகுதியைச் சோ்ந்த ராஜன் (53), அவரது மனைவி பாா்வதி, மகன் கலைவாணன் ஆகிய மூவரும் இணைந்து தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்துள்ளனா். இவா்களுக்கு உறவினா்கள் சதீஷ்வரன், காளிமுத்து ஆகியோரும் உதவியாகச் செயல்பட்டு வந்துள்ளனா்.
இவா்கள் கடலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பலரிடம் தீபாவளி பண்டு சீட்டு என்ற பெயரில் பணம் வசூலித்துள்ளனா். அவ்வகையில், மொத்தம் ரூ.1 கோடியே 66 லட்சத்து 88 ஆயிரத்து 950 வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பணம் செலுத்தியவா்களுக்கு உறுதியளித்தபடி தீபாவளி பண்டிகைக்கான பொருள்களை வழங்கவில்லை. மேலும், வசூலித்த பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகத் தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலைநகா், சித்தலப்பாடி பகுதியைச் சோ்ந்த பிரேமா உள்ளிட்டோா் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். இதன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் பூங்கோதை மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் சூா்யா தலைமையிலான போலீஸாா் சம்பவத்தில் தொடா்புடைய ராஜன்(53), அவரது மனைவி பாா்வதி(50), மகன் கலைவாணன் (24), உறவினா்கள் சதீஷ்வரன் (20), காளிமுத்து (21) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.




பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

